
ஆண்டாள் எனக்கு பாலூட்டி வளர்த்த தாய் போன்றவர். ஆண்டாள் தனது தமிழை எனக்கு ஊட்டி என்னை இந்த அளவுக்கு வளர்த்துள்ளார். அப்படி இருக்க நான் எனது தாயை சிறுமைப்படுத்துவேனா? அது ஒரு ஆராய்ச்சி கட்டுரை என கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்து உள்ளார்.
முன்னணி இணையதளத்துக்கு பேட்டியளித்த கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் என்னுடைய தாய் போன்றவர், அவரை நான் அவமதிக்கவில்லை என குறிப்பிட்டு உள்ளார்.
நான் ஆண்டாள் பற்றி 35 அல்லது 40 நிமிடங்கள் பேசினேன். அது நல்ல வரவேற்பை பெற்றது. நான் பல்வேறு உதாரணங்களை மேற்கோள் காட்டி விளக்கி கூறினேன். ஆண்டாளை பல்வகையிலும் புகழ்ந்து பாராட்டி நான் பேசினேன். அப்போது ஆண்டாளை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் உள்ள விஷயங்களைப்பற்றியும் கூறினேன்.
ஆண்டாள் தேவதாசியாக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து அங்கு இறந்ததாக அந்த ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாக கூறினேன். கடவுளாகவும், கடவுளுக்கு சேவை செய்தவராகவும் கூறப்படும் ஆண்டாளை பற்றி இப்படி அதில் எழுதப்பட்டிருக்கிறது என்று மேற்கோள்காட்டி சொன்னேன். ஆராய்ச்சி கட்டுரையில் கூறப்பட்டுள்ள அந்த வார்த்தை தற்போது தவறான அர்த்தத்தில் மாறி இருக்கிறது. அதில் தாசி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்பது வேறு. ஆனால் இடையில் தாசியை வேசி என்பதுபோல வேறு அர்த்தத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.
நான் இதுபற்றி விரிவாக சொன்னபோதும், அதை புரிந்து கொள்ளவில்லை. அந்த வார்த்தை இப்படி மாறியது தொடர்பாக யாரும் கேள்வி எழுப்பவும் இல்லை, ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதன் மூலப்பொருள் தவறு இல்லை என்றால் நான் மேற்கோள் காட்டி சொன்னது மட்டும் எப்படி தவறு ஆகும் என குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் பேசிய வைரமுத்து, நான் ஆண்டாளை குறைத்து மதிப்பிட்டோ அல்லது சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலோ ஆராய்ச்சி கட்டுரை தகவலை மேற்கோள்காட்டவில்லை. ஆண்டாள் எனக்கு பாலூட்டி வளர்த்த தாய் போன்றவர். ஆண்டாள் தனது தமிழை எனக்கு ஊட்டி என்னை இந்த அளவுக்கு வளர்த்துள்ளார். அப்படி இருக்க நான் எனது தாயை சிறுமைப்படுத்துவேனா? அது ஒரு ஆராய்ச்சி கட்டுரை. எல்லோராலும் அதை புரிந்து கொள்ள முடியாது. இப்படி நான் சொல்வதால் மீண்டும் அவர்கள் என்னை தவறாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படலாம். இந்த விஷயத்தில் அரசியல் தூண்டுதல் இருக்கிறதா? என்பதை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் வேண்டுமென்றே இந்த விஷயம் திரிக்கப்படுகிறது.
நான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன். தமிழ் எழுத்தாளர்களும் இதுபற்றி விளக்கி இருக்கிறார்கள். நான் எப்போதுமே உண்மையையே பேசுகிறேன். இந்த விஷயத்தில் இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான் அவரது பிறந்த ஊரில் சென்று அவரை அவமதிக்கும் வகையில் பேசுவேனா? நான் அவருடைய இலக்கியத்தை பரப்ப வேண்டும் என்று விரும்புகிறவன் என விளக்கமளித்துள்ளார்.