அன்று ஒரு தொகுதிக்காக திமுகவை தூக்கியெறிந்த வைகோ... மதிமுகவின் தேர்தல் ரீவைண்ட்..!

By Asianet TamilFirst Published Mar 8, 2021, 8:57 AM IST
Highlights

திமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக முதன் முறையாக இப்போதுதான் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
 

1999, 2004, 2019 என மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட்டிருந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலில் இப்போதுதான் கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்பு அக்கட்சிக்கு கிடைத்துள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் மதிமுக இருந்தது. அப்போது அந்தக் கூட்டணியில் மதிமுகவுக்கு திமுக 21  தொகுதிகளை ஒதுக்கியது.
ஆனால், ஒரு தொகுதி கூடுதலாக கேட்டும், சில தொகுதிகளை விடாப்பிடியாக கேட்டும் திமுகவிடம் முறுக்கிக்கொண்டது மதிமுக. வேட்புமனு தாக்கல் செய்ய சில நாட்களே இருந்த நிலையில் திமுக கூட்டணியிலிருந்து விலகிய மதிமுக, தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அப்போது திமுக கூட்டணியிலிருந்த பாஜகவும் 21 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்தக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் தவிர்த்து மற்ற எல்லா தொகுதிகளிலும் மதிமுக போட்டியிட்டு தோல்வியடைந்தது.
2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைசி கட்டம் வரை திமுக கூட்டணியில்தான் மதிமுக இருந்தது. அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, சிபிஎம், சிபிஐ எனப் பல கட்சிகள் இருந்தபோதும் மதிமுகவுக்கு 22 தொகுதிகள் வரை ஒதுக்க கருணாநிதி முன்வந்தார். ஆனால், 2001-ஆம் ஆண்டைப் போலவே ஒரே ஒரு தொகுதிக்காக கூட்டணியை முறித்துக்கொண்டு போனார் வைகோ. திருச்சியில் திமுக மாநாட்டில் வைகோ கட்அவுட் எரிக்கப்பட்டதெல்லாம் அப்போதுதான் நடந்தது. பின்னர் வைகோ அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வென்றார்.
தொடர்ந்து 2011-இல் தேர்தல் புறக்கணிப்பு, 2016-இல் மக்கள் நலக் கூட்டணி என்று முடிவெடுத்த வைகோ, இப்போதுதான் திமுக கூட்டணியில் உறுதியாக இடம் பெற்றுள்ளார். ஆனால், அன்று 20 தொகுதிகள் பெறும் அளவுக்கு ‘ஒர்த்’தாக இருந்த மதிமுக, இன்று வெறும் 6 தொகுதிகளில் போட்டியிடும் அளவுக்கு சுருங்கிவிட்டது. அதுவும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுகிறது மதிமுக. காலம் எப்படி மாற்றிவிட்டிருக்கிறது?  

click me!