
திமுக செயல்தலைவர் ஸ்டாலினை மாண்புமிகு முதலமைச்சர் என அழைக்கும் காலம் வரும் எனவும் தமிழகத்தில் ஆட்சியை நடத்துவது முதலமைச்சரா ஆளுநரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆர்.கே.நகரில் நேர்மையாக தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் ரத்து செய்து விட்டு செல்லுங்கள் என பாஜக தமிழிசை தெரிவித்து வருகின்றார்.
மேலும் எதிர்கட்சிகளும் கடும் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காசிமேடு பகுதியில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது, திமுக செயல்தலைவர் ஸ்டாலினை மாண்புமிகு முதலமைச்சர் என அழைக்கும் காலம் வரும் எனவும் தமிழகத்தில் ஆட்சியை நடத்துவது முதலமைச்சரா ஆளுநரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்தியா என்பது பல தேசிய இனங்களை கொண்ட நாடு எனவும் எனவே மதசார்பின்மையே இந்தியாவின் முதகெலும்பு எனவும் பேசினார்.
ஆளுநரின் செயல்பாடுகள் சுயாட்சிக்கும் , ஜனநாயகத்துக்கும் விடப்பட்ட சவால் எனவும் அதிமுக அரசு கொத்தடிமை கூட்டமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
திராவிட கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்ற மதவாத சக்திகளின் எண்ணம் நிறைவேறாது எனவும் மதசார்பின்மையை நசுக்க நினைத்தால் தேசிய ஒருமைப்பாடு சிதைந்து விடும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடிப்பது நிச்சயம் எனவும் மு.க.ஸ்டாலின் முதல்வராவதும் நிச்சயம் என்றார் வைகோ.