இன்று எம்.பி.யாகப் பதவியேற்கிறார் வைகோ... வைகோவின் அரசியல் வாழ்க்கையில் மற்றொரு முக்கியமான நாள்!

By Asianet TamilFirst Published Jul 25, 2019, 9:09 AM IST
Highlights

தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு திமுக உதவியுடன் மீண்டும் மாநிலங்களவைக்கு வைகோ தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ‘ நாடாளுமன்றத்தின் புலி’ என்றும்,  நாடாளுமன்றத்தில் தீர்க்கமாகவும் தீர்மானமாகவும் வாதங்களை எடுத்து வைத்து பேசுவதில் வைகோ வல்லவர் என்றும் பல்வேறு தலைவர்களால் பாராட்டப்பட்டவர் வைகோ.
 

23 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கிறார்.


தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மைத்ரேயன், ரத்தினவேல் உள்ளிட்ட 4 அதிமுக உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ் கட்சியின் டி.ராஜா ஆகியோரின் மாநிலங்களவை பதவிக்காலம் நேற்று முடிவுக்கு வந்தது. இவர்களின் இடத்துக்கு புதிதாக ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். திமுக, அதிமுக  சார்பில் தலா இருவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அந்த இடங்களுக்கு தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களில் வைகோவின் பதவியேற்புதான் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவைக்கு வைகோ செல்வதுதான் அந்த முக்கியத்துவத்துக்குக் காரணம். கடந்த 1978-ம் ஆண்டில் முதன் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக வைகோ ராஜ்ய சபையில் அடியெடுத்துவைத்தார். அதன்பிறகு 1984, 1990 ஆகிய ஆண்டுகளிலும் வைகோவை அன்றைய திமுக தலைவர் கருணாநிதி மாநிலங்களவைக்கு அனுப்பிவைத்தார். 1996-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டார் வைகோ.

 
அதன்பிறகு தனி இயக்கம் கண்டு 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராக வைகோ பணியாற்றியிருக்கிறார். 2004-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளாக அவரால் எம்.பி.யாக முடியவில்லை. தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு திமுக உதவியுடன் மீண்டும் மாநிலங்களவைக்கு வைகோ தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ‘ நாடாளுமன்றத்தின் புலி’ என்றும்,  நாடாளுமன்றத்தில் தீர்க்கமாகவும் தீர்மானமாகவும் வாதங்களை எடுத்து வைத்து பேசுவதில் வைகோ வல்லவர் என்றும் பல்வேறு தலைவர்களால் பாராட்டப்பட்டவர் வைகோ.


 மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கும் வைகோ, இன்று 4-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கிறார். இந்தப் பதவியில் 2025 வரை வைகோ நீடிப்பார். தேசத் துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்றபோது, ‘என் வாழ்க்கையில் முக்கியமான நாள்’ என்று வைகோ குறிப்பிட்டார். அதுபோலவே வைகோவின் அரசியல் வாழ்க்கையில் இன்று மற்றொரு முக்கியமான நாள்!

click me!