வைகோவை அவமரியாதை செய்தது சரியாம் - சொல்கிறார் திமுக மாவட்ட செயலாளர்

 
Published : Dec 18, 2016, 12:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
வைகோவை அவமரியாதை செய்தது சரியாம் - சொல்கிறார் திமுக மாவட்ட செயலாளர்

சுருக்கம்

வைகோ மீது செருப்பு , கற்கள் வீசி அவமரியாதை செய்து அனுப்பியது சரிதான் என்றும் அதை வரவேற்பதாக அறிக்கை விட்டு அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் பிரச்சனையை கிளப்பி உள்ளார்.

இது பற்றி அவரது அறிக்கை: 

தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ-வை தடுத்து அனுப்பியதை நான் வரவேற்கிறேன்.

 மருத்துவமனையில் தளபதி அவர்கள் இல்லாத நேரத்தில், வைகோவுக்கு நேர்ந்த இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு, தளபதி வருத்தம் தெரிவித்து கொண்டுள்ளார்கள். 

"திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் யார் ஈடுபட்டு வந்ததாலும் கழக தோழர்கள் அவர்களுக்கு எதிராக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தலைவர் கலைஞர் அவர்களுக்கோ, எனக்கோ எக்காலத்திலும் உடன்பாடானது அல்ல.  

கழகத்திற்கு எதிரான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் சக்தி மிக்க தொண்டர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கழக தோழர்கள் தவிர்த்து அமைதி காக்குமாறு கண்டிப்புடன்  கேட்டு கொள்கிறேன்",என்று தளபதி அறிக்கை விட்டு கண்டித்துள்ளார்கள். அது அவரது தகுதி.

வைகோ தகுதிக்கு, நடந்த இந்த சம்பவத்தை  நான் வரவேற்கிறேன்.

மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி அவர்கள் உடலுக்கு மரியாதை செலுத்தவே கழகத் தோழர்கள், கோபால்சாமியை அனுமதிக்கவில்லை. இன்று தலைவரை பார்க்க வந்தால் கழகத் தோழர்கள் அனுமதிக்கமாட்டார்கள், கொந்தளிப்பார்கள் என்பதை கோபால்சாமி அறிவார். இன்று காலையில் இருந்தே இந்த செய்தி முகநூலிலும் வைரலாகிக் கொண்டு இருக்கிறது.

இதை அவர் கட்சி முகநூல் தோழர்கள் மூலமாக அறிந்த கோபால்சாமி கலவரம் செய்யும் நோக்குடனே 'காவேரி' மருத்துவமனை வந்தார். வந்த நோக்கம் நிறைவேறியதாக இப்போது மகிழ்கிறார். நடந்த சம்பவத்திற்காக தளபதி அவர்கள் கழகத் தோழர்களை கண்டித்து அறிக்கை விட்டதை  எள்ளி நகையாடி கோபால்சாமி அறிக்கை விடுத்துள்ளார்.

திமுகவை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு, ஒரு கட்சி நடத்தும் நபர் கோபால்சாமி. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு அருகில் நின்று கொண்டு, திமுக மீது பொய் பழி சுமத்திய ஒரே நபர் இந்த மகான் மாத்திரமே. அதே போன்ற பழி சுமத்தும் எண்ணத்தோடு தான் இன்றும் வந்திருக்கிறார். 

அதிமுக நிர்வாகிகள் இன்று தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் விசாரிக்க வந்தபோது கூட எந்த சலசலப்பும் இல்லை. ஆனால் கோபால்சாமி வந்த போது, கழகத் தோழர்கள் கோபமுற்று, கொந்தளித்தார்கள் என்றால் அது அவர்களின் மனக்குமுறல். 

தொட்டிலையும் ஆட்டுவது , பிள்ளையையும் கிள்ளுவது யார் என தெரியும் என்று கோபால்சாமி கூறியிருக்கிறார். நஞ்சையும் கக்கிவிட்டு, நலம் விசாரிப்பதாக நாடகம் ஆட வந்தது நீ தான் என்பதை நாடறியும். நாவடக்கு.

இது தான் உண்மை தொண்டர்களிடம் இருந்து வெளிபடும், துரோகிகளுக்கான எச்சரிக்கை. புரிந்து கொள். இந்த நபர் பார்க்க வந்தார் என்று கேள்விபட்டிருந்தால், தலைவர் கூட மகிழ்ந்திருக்கலாம். அது அவர் பண்பாடு.  இவர் போன்றோர் பண்பாட்டிற்கு திருப்பி அனுப்பியதே சரி. அதை நான் வரவேற்கிறேன்.

-எஸ்.எஸ்.சிவசங்கர்,

மாவட்ட தி.மு.கழக செயலாளர்,

அரியலூர்.

இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?