பச்சை கொடி காட்டிய ஸ்டாலின்... ஆட்டையை கலைத்த வைகோ! செம்ம கடுப்பில் பாஜக

By sathish kFirst Published Nov 29, 2018, 2:14 PM IST
Highlights

“வந்தால் வரவேற்போம்” என ஸ்டாலின் பதில் சொன்னது குறுக்கிட்டு வைகோ பேசியது பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முதற்கட்ட ஆய்வுகள் நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் தகவல் வெளியான உடனேயே தமிழக விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. மேகதாது விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். 

பின்னர் அனைத்துத் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், “மேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி தந்திருப்பதை கண்டிக்கும் வகையிலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினோம். 24 மணி நேரத்திற்குள் இக்கூட்டத்தை கூட்டியுள்ளோம். மற்ற கட்சிகளை அழைப்பதற்கு போதிய நேரமில்லாத காரணத்தால், அவர்களை அழைக்க முடியவில்லை. ஆகவே ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

“சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்டி, சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு உடனே அனுப்ப வேண்டும்” என்று கூறிய ஸ்டாலின், இதனை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம் என்று அறிவித்தார்.

மற்ற கட்சியினருக்கும் ஊடகங்கள் மூலமாக அழைப்பு விடுக்கிறேன் என்று கூறிய ஸ்டாலினிடம், பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, “வந்தால் வரவேற்போம்” என்று பதிலளித்தார். அப்போது குறுக்கிட்ட வைகோ, “மேகதாது விவகாரத்தில் கேடு செய்ததே பாஜகதானே, அவர்களை எப்படி அழைக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார். இந்த கூட்டணிக்கு தலைவரான திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னாலும், கூட்டணியில் அங்கமாக இருக்கும் வைகோ இப்படி பேசியது தமிழக பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

click me!