
அ.தி.மு.க.வில் பல அமைச்சர்களுக்கு மட்டுமில்லை, அக்கட்சியின் மற்ற முக்கிய புள்ளிகளுக்கும் இப்போது வாயில் வாஸ்து சரியில்லைதான் போல.
ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சியின் போது சில காலம் அமைச்சராக இருந்து, இன்று வரை அதே கெத்தில் வலம் வருபவரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான வைகை செல்வனும் இதே டீமில் அடங்குகிறார்.
சமீபத்தில் ஸ்டாலின் பற்றி பேசியிருக்கும் அவர், “எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின், ஆளுமைப் பண்பு அற்ற அரசியல்வாதியோ என எண்ணிட தோண்றுகிறது. இது பொதுவெளிகளில் மட்டுமில்லை, அவரது சொந்த கட்சிக்குள்ளேயும் உருவாகியுள்ளது.
அவரொன்றும் சுயம்புவாக உருவாகி மேலே வந்தவரில்லை. குடும்ப அரசியலால் திணிக்கப்பட்ட தலைவர் அவர். என்னதான் படிப்படியாக அவர் வளர்ந்திருந்தாலும் கூட அவரது வளர்ச்சி என்பது ஒரு வித திடீர் வீக்கத்தையே காட்டுகிறது. வீக்கமென்பது வளர்ச்சியில்லை, அது ஆபத்தான ஒன்று.
காற்றுக்கு உருவமில்லை, கதிரவனுக்கு நிழல் இல்லை. இதுபோல் ஸ்டாலினுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை.” என்று உரசியிருக்கிறார்.
இதை கேள்விப்பட்டு தி.மு.க.வினர் ஏக காட்டத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். விளைவு, இணைய தி.மு.க.வினர் வைகையை தூக்கிப்போட்டு தூர் வாரி வருகின்றனர்.
”வைகை செல்வனிடம் எந்த அதிகாரமும் இல்லை இப்போது. தெளிவாய் சொல்லப்போனால் செல்வாக்கு எனும் நீர் வற்றிப்போன வெறும் வாய்க்கால்தான் அவர். வறண்டு கிடக்கும் அவர் எடப்பாடியின் மனதை குளிர வைக்கும் வகையில் எதையாவது பேசி ஏதாவது வாரியம், கீரியம் பதவி கிடைக்காதா என்று அல்லாடுகிறார். அதன் வெளிப்பாடே இந்த பிதற்றல் எல்லாம்.
எமெர்ஜென்ஸியில் அடிவாங்கி, அரசியல் சூறாவளியில் எதிர்த்து நின்று, தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு வளர்ந்து நிற்கும் தளபதி ஸ்டாலினின் வளர்ச்சியை ‘வீக்கம்’ என்றும், ‘குடும்ப அரசியலால் திணிக்கப்பட்ட தலைவர்’ என்றும் அர்த்தமில்லாமல் வர்ணிக்கும் வைகை செல்வனை பார்த்தால் பாவமாய் இருக்கிறது. பதவிக்காக இப்படியாய் பாட்டுப்பாடி அலைவார்?
கருத்துச் செறிவேயில்லாமல் வெற்று வார்த்தை ஜாலத்தில் வாழ்க்கை நடத்தும் வைகை செல்வன் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.” என்று வகுந்தெடுத்துள்ளனர்.
இடி, மின்னல், பெருமழை...இதுதானே தமிழக அரசியல்!