திமுகவுக்கு தாவும் அமமுகவின் முக்கிய புள்ளி ! அடுத்த விக்கெட் காலி ! சடசடவென சரியும் டி.டி.வி யின் கோட்டை !!

By Selvanayagam PFirst Published Mar 21, 2019, 6:45 AM IST
Highlights

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நேற்று இரவு நீக்கப்பட்ட முனனாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  திமுகவில் இணைய உள்ளார். ஏற்கனவே அமமுகவைச் சேர்ந்த கரூர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததால் அதிர்ச்சியில் இருந்த தினகரனுக்கு கலைராஜன் அடுத்த அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.

சொத்துக்குவிப்பு  வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதையடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும்  அமமுகவிற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அப்போது சென்னையின் முக்கிய தளபதியாக இருந்த முன்னாள் எம்எல்ஏ வி.பி. கலைராஜன் தென் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் தமிழகம் முழுவதும் அமமுக போட்டியிடும் 24 எம்.பி.தொகுதி வேட்பாளர்களையும், 9 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் தினகரன் அறிவித்தார். இதனிடையே அதிரடி திருப்பமாக தென் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக இருந்து வந்த வி.பி.கலைராஜன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப் பெயரை உருவாக்கிவிட்டதாலும் கலைராஜனை கட்சியில் இருந்து நீக்குவதாக அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக டிடிவி தினகரனுடன் கருத்து மாறுபாடு காரணமாக கட்சியில் இருந்தும் கட்சியின் செயல்பாடுகளில் இருந்தும் கலைராஜன் ஒதுங்கியிருந்தாகவும், அதே நேரம்  திமுகவில் நெருக்கம் காட்டிவந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை ஸ்மெல் பண்ணிய தினகரன்  இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வி.பி. கலைராஜன் திமுகவின் முக்கிய தலைவரை அண்மையில் சந்தித்து பேசியதாகவும் இன்று  திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது..

click me!