அவரசமாக தமிழக சட்டமன்றத்தை கூட்டுங்கள்.. தீர்மானம் நிறைவேற்றுங்கள்.. முதல்வருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 1, 2021, 1:46 PM IST
Highlights

குறைந்தபட்ச ஆதார விலை இல்லாத- கார்ப்பரேட்டுகளுக்கு, தங்களை நிரந்தர அடிமைகளாக்கும் இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது போராடும் விவசாயிகளின் முக்கியமானதும், முதலாவதுமான கோரிக்கையாக இருக்கிறது.

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்ய வேண்டும் எனவும், அதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும், அதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டக் கோரியும்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் விவரம் வருமாறு:

முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களுக்கு வணக்கம்...  பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, நேற்று (31-12-2020) கேரள சட்டமன்றத்திலும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், சாலைகளிலேயே சமைத்து, அதை  உண்டு,  கடந்த 37 நாட்களாகத் தொடர்ந்து இரவும் பகலுமாக, பல லட்சக்கணக்கான விவசாயப் பெருமக்கள் டெல்லி தலைநகரில், திடமான - தீர்மான சிந்தையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

குறைந்தபட்ச ஆதார விலை இல்லாத- கார்ப்பரேட்டுகளுக்கு, தங்களை நிரந்தர அடிமைகளாக்கும் இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது போராடும் விவசாயிகளின் முக்கியமானதும், முதலாவதுமான கோரிக்கையாக இருக்கிறது. முதன் முதலில் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்து- இலவச மின்சாரம் அளித்த மாநிலம் என்ற முறையில், விவசாயிகளுக்கு மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழகம், எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றிணைந்து, அவர்கள் பக்கம் நின்று, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம். தங்களின் உணர்வுகளைத் தமிழ்நாடு சட்டமன்றம் எதிரொலித்து, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்குத் தோளோடு தோள் நின்று துணை புரிய வேண்டும் என்பது, நம் மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயப் பெருமக்களின் ஆழ்ந்த விருப்பமாக இருக்கிறது. 

வரவேற்க வேண்டிய அந்த  விருப்பத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதில், பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது. எனவே, தமிழ்நாடு சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும்; அதற்காகத் தமிழ்நாடு சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும்; அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

 

click me!