கொரோனா பாதுகாப்பு மையங்களில் 12,000 படுக்கைகளை தயார்படுத்த விரைந்து நடவடிக்கை.. சென்னை மாநகராட்சி அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Apr 21, 2021, 11:23 AM IST
Highlights

கொரோனா பாதுகாப்பு மையங்களில் சுமார் 12,000 படுக்கைகளை தயார்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கவும், வீடுகள்தோறும் சென்று கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும் கண்காணிப்பாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசம் அணிதல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுரை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கள ஒருங்கிணைப்புக்குழு  அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை அதிகரிப்பது குறித்தும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தல், தொற்று பாதித்த நபர்களுக்கான முதற்கட்ட உடற் பரிசோதனை செய்யும் மையங்களுக்கு பொதுமக்களை அழைத்து வர மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்களை கொண்டு பொது மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் குறித்தும், 200 வார்டுகளிலும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை அதிகரித்தல் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் விரிவாக கேட்டிருந்தார். 

அதேபோல் நாள்தோறும் 12 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரையிலான கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதை 25 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உயர்த்தவும், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 30 தடவல் சேகரிப்பு மையங்கள் மற்றும் நடமாடும் தடவல் சேகரிப்பு மையங்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனியார் மருத்துவர்களை அணுகும் வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை மாநகராட்சியின் மேற்குறிப்பிட்ட மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். பெருநகரத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள,கொரோனா பாதுகாப்பு மையங்களில் சுமார் 12,000 படுக்கைகளை தயார்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கவும், வீடுகள்தோறும் சென்று கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும் கண்காணிப்பாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசம் அணிதல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுரை வழங்கினார். 

கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிடவும் அறிவுறுத்தினார். இதேபோல் அனைத்து வகை வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிகளையும், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதித்தல் மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் அவர் அறிவுரை வழங்கினார் என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!