லாக் டவுன் வேண்டாம்..! பின்வாங்கிய நரேந்திர மோடி..! பரபரப்பு பின்னணி..!

By Selva KathirFirst Published Apr 21, 2021, 11:21 AM IST
Highlights

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்திற்கும் மேல் பதிவாகி வரும் நிலையிலும் கடந்த ஆண்டை போல் லாக் டவுன் போடுவதில்லை என்கிற முடிவிற்கு மத்திய அரசு வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்திற்கும் மேல் பதிவாகி வரும் நிலையிலும் கடந்த ஆண்டை போல் லாக் டவுன் போடுவதில்லை என்கிற முடிவிற்கு மத்திய அரசு வந்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் வேகமெடுப்பதற்கு முன்னரே மத்திய அரசு 14 நாட்கள் லாக் டவுனை அறிவித்தது. அதன் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நாடுமுழுவதும் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த லாக் டவுன் காரணமாக சாமான்ய மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். தொழில் நிறுவனங்கள் சிறியன முதல் பெரியன வரை பல பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டன. ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மத்திய அரசு அறிவித்த சில சலுகைகள் மற்றும் தளர்வுகள் தான் தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட காரணமாக அமைந்தது.

ஆனால் கடந்த ஆண்டு அமலில் இருந்த லாக் டவுன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை தற்போது வரை தொழில் நிறுவனங்களால் முழுமையாக சரி செய்ய முடியவில்லை. அத்தோடு கடந்த ஆண்டு வரை தடையில்லாமல் நடைபெற்று வந்த வர்த்தகம் கொரோனா காரணமாக முழு வீச்சில் நடைபெறவில்லை. நிலைமை இப்படி இருக்க தற்போது நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் மறுபடியும் கடந்த ஆண்டை போலவே தற்போதும் லாக் டவுன் போடப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்தியாவில் தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்து 70ஆயிரத்தை கடந்துள்ளது.

டெல்லி முழுவதும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மும்பையில் ஊரடங்கு என்று அறிவிக்கப்படவில்லை என்றாலும் 144 உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அந்த இரண்டு மாநகரங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கேரளா, தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, உத்தரபிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் தற்போது கொரோனா வேகமெடுத்து வருகிறது. இங்கெல்லாம் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கூட கொரோன பாதிப்புகள் குறைந்தபாடில்லை. இதனால் மறுபடியும் நாடு தழுவிய அளவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்தன.

இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் நேற்று உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால் மறுபடியும் லாக் டவுன் போடப்பட உள்ளதாக தகவல்கள் வேகமெடுத்தன. ஆனால் மாநிலங்கள் லாக் டவுனை தவிர்க்க வேண்டும் என்று மோடி அறிவுறுத்தல் கூறினார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதம் தான் லாக் டவுன் என்று கூறியுள்ளார் மோடி. இதன மூலம் தற்போதைக்கு லாக் டவுன் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. கொரோனா படு வேகமாக பரவி வரும் நிலையிலும் மத்திய அரசு லாக் டவுனை தவிர்க்க காரணம் ஏழை எளிய மக்கள் மற்றும் தொழில் துறையினர் தான் என்கிறார்கள்.

லாக் டவுன் காரணமாக ஏழை எளிய மக்களும், அன்றாட கூலித் தொழிலாளர்களும் முதலில் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். அதன் பிறகு தொழில் நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. லாக் டவுன் காரணமாக கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பையை சரி செய்ய முடியாத நிலையில் தற்போது மீண்டும் லாக் டவுன் என்றால் நிறுவனங்களை நிரந்தரமாக மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று தொழில் கூட்டமைப்பினர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக சொல்கிறார்கள். இதனால் தான் லாக் டவுனை மத்திய அரசு தவிர்த்துள்ளது.

click me!