
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு இடம் கூட ஒதுக்காததால் திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெளியேறியுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திமுக உள்ளிட்ட கட்சிகள் தனது கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. சில இடங்களில் ஆளுங்கட்சியினர் மீது கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் பதவியில் தி.மு.க. கூட்டணியில் வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று ஓரளவுக்கு உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் மாவட்ட தலைவா் அஷ்ரப் அலி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் போட்டியிடுவதற்கு 6 இடங்களை தேர்வு செய்து கொடுத்தோம். ஆனால் தி.மு.க. நிர்வாகிகள் 4 நாட்களாக எங்களை அலைக்கழித்தனர். கடைசியில் உங்களுக்கு சீட்டு கிடையாது என்று கூறிவிட்டனர். இது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. கூட்டணிக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அதிகளவு வாக்குகளை சேகரித்து கொடுத்தது. தி.மு.க. அமைச்சர்களிடம் எங்களது ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது தருகிறோம் எனக்கூறியிருந்தனர். ஆனால் தற்போது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு இடங்கள் கூட கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.