
கர்நாடக நடிகரும், ‘சந்தனக்கட்டை’ சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவருமான உபேந்திரா, நேற்று முறைப்படி புதிய கட்சி தொடங்கி அரசியலில் குதித்தார்.
தனது கட்சிக்கு ‘கர்நாடக பிரக்யவந்தா ஜனதா பக்ஷா’ எனப் பெயரிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில்உபேந்திரா கட்சி தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர், நடிகர்
கர்நாடக சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என முப்பரிமாணங்களில் ஜொலித்து வருபவர் உபேந்திர ராவ். இவர் இயக்கி, நடித்த தார்லே நா மாகா, ஏ, சூப்பர்ஸ்டார், ஹாலிவுட், சூப்பர் ஆகிய படங்கள் வெற்றிகரமான ஓடியவை. கர்நாடக திரையுலகில் வெற்றிகரமான நடிகராகவும், இயக்குநராகவும், அதிகமான ஊதியம் பெறுபவராகவும் உபேந்திரா இருந்து வருகிறார்.
அரசியல்
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும், விரைவில் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அதிரடியாக உபேந்திரா அறிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக பெங்களூரில் நேற்று நடந்த விழாவில் தனது கட்சியின் பெயரையும், கட்சியையும் உபேந்திரா அறிமுகம் செய்தார். இவர் தனது கட்சிக்கு ‘கர்நாடக பிரக்யவந்தாஜனதா பக்ஷா’ என பெயரிட்டுள்ளார்.
தனது கட்சியின் பெயரை அறிமுகம் செய்த பின் நிருபர்களிடம் உபேந்திரா கூறியதாவது-
மக்களுக்கான கட்சி
இது என்னுடைய கட்சி அல்ல, மக்களுக்கான கட்சி. நான் மக்களுக்கான தளத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் யார் இணையவிரும்புகிறார்களோ அவர்கள் இணைந்து கொள்ளலாம்.
கர்நாடக அரசியலில் எனது கட்சி புதிய தொடக்கத்தை அளிக்கும். எங்களுக்கு மக்கள் அதிகாரம் அளித்தால், மக்களை மையப்படுத்தி அரசு இயங்கும். நான் எதையும் மக்களுக்கு செய்யவில்லை என்ற வருத்தத்துடன் உயிர்துறக்க விரும்பவில்லை. நான் மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். நான் தேர்தலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், தோல்வி அடைவதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை.
புரட்சியை எதிர்பார்க்கிறேன்
ஆனால், சட்டசபைத் தேர்தலில் வெற்றி என்பது, மிகப்பெரிய இலக்கு. 2018ம் ஆண்டு தேர்தலில் எனது கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள். இதில் நாங்கள் அனைத்து இடங்களிலும் வெற்றியும் பெறலாம், தோல்வியும் அடையலாம்.
நான் கர்நாடகவில் புரட்சியை எதிர்பார்க்கிறேன், படிப்படியான மாற்றத்தை கேட்கவில்லை. நாம் இங்கிருக்கும் மோசமான நிர்வாகத்தையும், முறையும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது, நாம் அதை மாற்ற முயற்சிக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர்ராக விரும்பவில்லை
நாங்கள் மக்களிடம் வைக்கும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்கலாம், இந்த முறை நம்பிக்கை இழக்க வேண்டாம். கர்நாடகத்தில் நிலவும் அனைத்து பிரச்சினைகளையும் உணர்ச்சிப்பூர்வமாக அனுகாமல், புத்திசாலித்தனமாக, நேர்மையாக கையாளுவோம்.
சினிமாவில் வெற்றி பெறுபவர்கள், அரசியலில் தோல்வி அடைந்துவிடுகிறார்கள். பவன்கல்யாண், சிரஞ்சீவி ஆகியோர் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. ஆனால், எல்லோரும் எம்.ஜி.ஆர். போல் உருவாக முடியாது. என்னைப் பொருத்தவரை நான் எம்.ஜி.ஆர். போல் அல்லது சிரஞ்சீவி, பவன் கல்யாண் போல் ஆக விரும்பவில்லை. நான் நானாக இருக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.