யோகியை பதற வைக்கும் அகிலேஷ்.. கேம் சேஞ்சர்ஸ் ஓபிசி தலைவர்கள்.. உபியில் வலிமை காட்டுவது யார் ?

By Raghupati RFirst Published Jan 16, 2022, 12:35 PM IST
Highlights

உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பிரதமர் மோடி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாராணசி உத்தரப் பிரதேசத்தில் தான் உள்ளது. இதை இமேஜ் விஷயமாகவும் பாஜக தலைமை கருதுகிறது. மொத்தம் 80 எம்பிகளை மக்களவைக்கு அனுப்புவதால் 2024 தேர்தலுக்கும் சேர்த்தே பாஜக திட்டம் போடுகிறது. 2024 தேர்தலை ஆளும் கட்சியாக இருந்து சந்திக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். இதனால்தான் கடந்த சில வாரங்களாகப் பிரதமர் மோடியே உத்தரப் பிரதேசத்தில் பல முக்கிய திட்டங்களை நேரடியாகத் தொடங்கி வைத்து வருகிறார். தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தே தீர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. 

இதனால் பல்வேறு நடவடிக்கைகளை பாஜக - ஆர்எஸ்எஸ் எடுத்து வருகிறது. இந்த முறை கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என்று பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதே இல்லை. முதல்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். 

அவர் இதுவரை மேலவை மூலமாக எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோரக்பூர் தொகுதி ஆதித்யநாத் மிகவும் வலுவாக இருக்கும் தொகுதியாகும். ஐந்து முறை கோரக்பூர் தொகுதியில் இருந்து எம்பியாக வெற்றிபெற்று இவர் லோக்சபாவிற்கு சென்றுள்ளார். இதனால் வலுவான கோரக்பூர் தொகுதியை ஆதித்யநாத் தேர்வு செய்து இருக்கிறார்

அமைச்சர்கள் உட்பட 10 பாஜக எம்எல்ஏக்கள் இதுவரை பாஜகவில் இருந்து வெளியேறி உள்ளனர். அதில் 9 பேர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஓபிசி தலைவர்கள். பாஜகவிற்கான ஓபிசி ஆதரவு இதனால் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.ஓபிசி ஆதரவை பெறுவதன் மூலம் அகிலேஷ் யாதவிற்கான வெற்றிவாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஸ்வாமி பிரசாத் மவுரியா என்ற மூத்த அமைச்சர் மற்றும் ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாத்பதி, பகவதி சாகர், வினய் சாக்யா, முகேஷ் வெர்மா உள்ளிட்ட பல்வேறு ஓபிசி தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். 

இப்படி திடீரென ஓபிசி தலைவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறிய காரணத்தால் அக்கட்சி தலைமை இந்த முறை ஓபிசி வேட்பாளர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க தொடங்கி உள்ளது. ஓபிசி மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஓபிசி எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து வெளியேறி எதிர்தரப்பில் ஐக்கியம் ஆக தொடங்கி உள்ளனர். இது உத்தர பிரதேச அரசியல் வியூகத்தை மாற்ற தொடங்கி உள்ளது. இதனால்தான் இன்று பாஜக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் ஓபிசி பிரிவினருக்கு அதிக இடம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

click me!