எனக்கு 75 வயசாயிடுச்சு... இனி எனக்கு பதவி வேண்டாம்... அமைச்சர் பதவியிலிருந்து விலகிய உ.பி. பாஜக அமைச்சர்!

By Asianet TamilFirst Published Aug 21, 2019, 7:25 AM IST
Highlights

75 வயதுக்குப் பிறகு யாரும் அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருக்கக் கூடாது என்பதை பாஜக மேலிடம் கடைபிடித்துவருகிறது. அண்மையில் 76 வயதான எடியூரப்பா கர்நாடகாவில் முதல்வரான நிலையில், 75 வயதை எட்டியவுடன் ராஜேஷ் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

75 வயதை எட்டியவுடன் உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார் ர் ராஜேஷ் அகர்வால்.


உ.பி.யில் பாஜக மூத்த தலைவரான அவர் பரேலி தொகுதியிலிருந்து கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்துவருகிறார். கடந்த 2003 முதல் 2007ம்- ஆண்டு வரையிலான காலத்தில் அவர் சட்டப்பேரவை துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார். கடந்த 2017-ல் பாஜக அரசு பொறுப்பேற்றபோது நிதி அமைச்சராக ராஜேஷ் அகர்வால் பதவியேற்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய 75-வது பிறந்த நாளை ராஜேஷ் அகர்வால் கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்று ராஜேஷ் அகர்வாலை வாழ்த்தினார்கள். இந்நிலையில் திடீரென்று தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார். இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் “எனக்கு 75 வயது ஆகிவிட்டது. கட்சியின் கொள்கைப்படி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இதனை ஏற்பது கட்சியின் முடிவு. அதுபோலவே எனக்கு வேறு பொறுப்புகள் வழங்குவதும் கட்சியின் முடிவு. கட்சி எனக்கு எந்தக் கட்டளை இடுகிறதோ, அதை ஏற்பேன்” என ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.


அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ராஜேஷ் அகர்வால் விரும்பினார். ஆனால், 75 வயது நெருங்கிவிட்டதை காரணம் காட்டி போட்டியிட  அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.  75 வயதுக்குப் பிறகு யாரும் அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருக்கக் கூடாது என்பதை பாஜக மேலிடம் கடைபிடித்துவருகிறது. அண்மையில் 76 வயதான எடியூரப்பா கர்நாடகாவில் முதல்வரான நிலையில், 75 வயதை எட்டியவுடன் ராஜேஷ் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

click me!