குமாரசாமிக்கு நடந்தது இப்போது எடியூரப்பாவுக்கு... அமைச்சராக முடியாத எம்.எல்.ஏ.க்களின் குடைச்சல் தொடக்கம்?

By Asianet TamilFirst Published Aug 21, 2019, 7:02 AM IST
Highlights

காங்கிரஸ் - மஜத ஆட்சியில் அமைச்சராக முடியாத எம்.எல்.ஏ.க்கள் குமாரசாமி ஆட்சிக்கு குடைச்சல் கொடுத்துவந்தனர். அதேபோல எடியூரப்பா அரசுக்கும் எம்.எல்.ஏ.க்கள் குடைச்சலைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. 

 கர்நாடகாவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
 கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களின் சித்து விளையாட்டல், குமாரசாமி அரசு கடந்த மாதம் 23-ம் தேதி கவிழ்ந்தது. இதனையடுத்து ஜூலை 28 அன்று புதிய முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றுக்கொண்டார். தனி ஒருவராக அவர் மட்டுமே பொறுப்பேற்ற நிலையில், அமைச்சர்களை உடனடியாக நியமிக்க முடியாமல் எடியூரப்பா தடுமாறினார்.
முழு மெஜாரிட்டி இல்லாமல், 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் தற்போது நூலிழையில் பாஜக ஆட்சியில் உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாஜக எம்.எல்.ஏ.க்கள் பலரும் அமைச்சர் பதவியைக் கேட்டுவந்ததால், அமைச்சர்கள் நியமனம் தாமதமாகிவருவதாக  தகவல்கள் வெளியாயின. நீண்ட ஆலோசனை, அமித் ஷா உடனான சந்திப்புக்கு பிறகு அமைச்சர்களை எடியூரப்பா இறுதி செய்தார்.  இதனையடுத்து 16 பாஜகவினர், 1 சுயேட்சை என 17 பேர் புதிய அமைச்சர்களாக நேற்று பெறுப்பேற்றுக்கொண்டனர்.

 
கர்நாடகாவில் 25 நாட்கள் கழித்து ஒரு வழியாக அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எடுத்த எடுப்பிலேயே நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்காமல், தங்களுடைய ஆதரவாளர்களை வைத்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிக்க வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் முதல் கட்டமாகப் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாக கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


காங்கிரஸ் - மஜத ஆட்சியில் அமைச்சராக முடியாத எம்.எல்.ஏ.க்கள் குமாரசாமி ஆட்சிக்கு குடைச்சல் கொடுத்துவந்தனர். அதேபோல எடியூரப்பா அரசுக்கும் எம்.எல்.ஏ.க்கள் குடைச்சலைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. 

click me!