இறைச்சி, மீன் மார்க்கெட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்.. காற்றில் பறக்க விடப்பட்ட விதிமுறைகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 24, 2021, 12:15 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ள நிலையில் சென்னை, பட்டினம்பாக்கம் மற்றும் சிந்தாதிரி பேட்டையில்  உள்ள மீன் சந்தைகளில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.  

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ள நிலையில் சென்னை, பட்டினம்பாக்கம் மற்றும் சிந்தாதிரி பேட்டையில் உள்ள மீன் சந்தைகளில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. போதிய சமூக இடைவெளியின்றி மக்களை திரண்டதால் கொரோனா பரவும் சூழல் நிலவியது. கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். ஆனால் எந்த அச்ச உணர்வும் இன்றி மக்கள் கூட்டம் கூட்டமாக மீன் மார்க்கெட்டுகளில்  குவிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் நாளை கொரோனா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளதால், பொதுமக்கள்  இறைச்சி மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் கூட்டமாக திரண்டனர். நாளை மளிகை கடை, டாஸ்மாக் கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்படும் என்பதால் பொதுமக்கள் இன்றே பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதலே மக்கள் குவியத் தொடங்கினர்.

மேலும் சந்தைக்கு வரக் கூடிய மக்களுக்கு பாதுகாப்பான முறையில் மீன்களை வாங்கிச் செல்ல கிருமிநாசினி கொடுத்தும்,  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும் தற்போது  மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் வஞ்சிரம், வவ்வால், இறால் உள்ளிட்டவைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் மக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர். கட்டாயம் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியும், இறைச்சி, மீன் மார்கெட்களில் கட்டுக் கடங்காத கூட்டத்தால் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது வேதனை.  

 

click me!