உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறை, அக்கிரமம்.. திமுக, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கொந்தளிக்கும் அதிமுக!

By Asianet TamilFirst Published Oct 13, 2021, 9:15 PM IST
Highlights

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய வன்முறையையும் நடத்தி முடித்திருக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியால் திமுக முகாம் மகிழ்ச்சியில் உள்ளது. இந்த வெற்றி, மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியினர் உற்சாகத்துல் உள்ளனர். இந்தத் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை நடந்ததாகவும், மாநில தேர்தல் ஆணையத்தை திமுக அரசு தன்னுடைய கைப்பாவையாக மாற்றி விட்டது என்றும் எதிர்க்கட்சியான அதிமுக குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
அதில், “அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்ற கழகம். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய வன்முறையையும் நடத்தி முடித்திருக்கிறது. திமுக அரசும், தேர்தல் ஆணையமும் நடத்தி உள்ள விதிமீறல்களை பட்டியலிட்டால் நாடு தாங்காது. முறைகேடுகள் தொடர்பாக அதிமுக அளித்த புகார் மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. சிசிடிவி கேமராக்கள் பல இடங்களில் பழுதடைந்து இருப்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது.
திமுகவுக்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் தாமதமாக தொடங்கி உள்ளது. அதிமுக முகவர்கள் பல இடங்களில் மையங்களில் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள் பல வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.” என்று அறிக்கையில் ஓபிஎஸ் - இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
 

click me!