முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க மத்திய அமைச்சரும் மறுப்பு... அதிர்ச்சியில் அதிமுகவினர்..!

By vinoth kumarFirst Published Dec 26, 2020, 9:40 AM IST
Highlights

தமிழக பாஜக தலைவர்களை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க மறுத்துள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழக பாஜக தலைவர்களை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க மறுத்துள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி ஒரு வழியாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். 

ஆனால், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட அக்கட்சியின் மற்ற தலைவர்களும் அதிமுக வேண்டுமென்றால், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கலாம். எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய  ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை டெல்லி பாஜக மேலிடம் தான் அறிவிக்கும் தொடர்ந்து கூறிவருகின்றனர். இதற்கு அதிமுக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று சென்னை வந்தார். பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் புதிய  இந்தியா செய்திகள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு என்ற  புத்தகத்தை வெளியிட்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெறும். நாட்டில் பெரும்பாலான கட்சிகள் குடும்பக் கட்சிகளாக உள்ளன. ஆனால், பாஜகவே ஒரு குடும்பம் தான் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் தேசிய ஜனநாயக  கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா?  என்று கேள்வி  எழுப்பினர். அதற்கு பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்கவில்லை. தொடர்ச்சியாக  செய்தியாளர்கள் இந்த கேள்வியை கேட்டனர். அதற்கும் அவர் பதில் எதுவும்  அளிக்கவில்லை. தொடர்ந்து அவர், “எங்களது கட்சிக்கு என சில வழிமுறைகள்  உள்ளன. அதன்படி கட்சியின் தலைமை தான் அனைத்தையும் அறிவிக்கும். அதை தான்  மாநில தலைவர் எல்.முருகன்  தெரிவித்திருக்கிறார்.ஒரு கூட்டணி என்று இருந்தால், அதில்  ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல் என்பது இயல்பு. அதிமுக-பாஜ கூட்டணியில் மட்டுமல்ல.  எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அதில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தே   இருக்க வேண்டும் என்று பதில் அளித்தார். மத்திய அமைச்சரின் இந்த பேட்டி அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!