முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமர் மோடி..! தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரிப்பு

By karthikeyan VFirst Published May 8, 2021, 7:58 PM IST
Highlights

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது மத்திய அரசு. 
 

இந்தியா கொரோனா 2ம் அலையை எதிர்கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ள இந்த சூழலில், கடும் சவாலான காலக்கட்டத்தில் தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் சவால் இருக்கிறது.

நேற்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், நேற்று மாலையே பிரதமர் மோடிக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி கடிதம் எழுதினார். முதல்வராக பொறுப்பேற்ற பின், பிரதமர் மோடிக்கு முதல் முறையாக எழுதிய கடிதத்தில், வரும் நாட்களில் தமிழகத்திற்கு மத்திய அரசு 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும். தேசிய ஆக்ஸிஜன் திட்டத்தின் கீழ், வெறும் 220 மெட்ரிக் டன் மட்டுமே வழங்கியது துரதிர்ஷ்டவசமானது.

அடுத்த 2 வாரங்களில் தமிழகத்தின் ஆக்ஸிஜன் தேவை 840 மெட்ரிக் டன்களாக உயரும். எனவே அடுத்த 2 வாரங்களில் 400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இன்று காலை பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலிலும் ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்திற்கான மத்திய அரசின் ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 220 மெட்ரிக் டன்னிலிருந்து 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது மத்திய அரசு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து மத்திய அரசு, வேகமாக தீர்த்துவைத்துள்ளது.
 

click me!