கொங்கு மண்டலம் யாருக்கு? கனிமொழிக்கு ஸ்பீடு பிரேக்கர் போடும் உதயநிதி..!

By Selva KathirFirst Published Jun 14, 2021, 8:44 AM IST
Highlights

திமுகவின் செல்வாக்கை உயர்த்திப் பிடிக்க கொங்கு மண்டலத்தில் சிறப்பு கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில் கனிமொழிக்கு கிடைத்த வாய்ப்பு கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவின் செல்வாக்கை உயர்த்திப் பிடிக்க கொங்கு மண்டலத்தில் சிறப்பு கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில் கனிமொழிக்கு கிடைத்த வாய்ப்பு கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் திமுகவின் ஆசையை நிராசையாக்கியதில் கொங்கு மண்டலத்திற்கு முக்கிய பங்கு உண்டு. சொல்லப் போனால் கொங்கு மண்டத்தில் வெற்றி பெற்றது அதிமுக என்றே கூட கூறலாம். கோவை, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக் கொடி நாட்டினர். இதனால் கொங்கு மண்டத்தில் திமுகவிற்கு படு தோல்வியே கிடைத்தது. சென்னை, வட மாவட்டங்கள், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் திமுக வெற்றியை குவித்தாலும் கொங்கு மண்டலம் காலை வாரியது.

கடந்த 2006ம் ஆண்டு முதலே திமுகவிற்கு கொங்கு மண்டலம் தலைவலியாக உள்ளது. இதற்கு காரணம் அங்கு திமுகவிற்கு செல்வாக்கு மிக்க மாவட்ட நிர்வாகிகள் இல்லை என்பது தான் என்கிறார்கள். பொங்கலூர் பழனிச்சாமிக்கு பிறகு கொங்கு மண்டலத்தில் இருந்து திமுக நிர்வாகிகள் யாரும் பெரிய அளவில் அங்கு களப்பணியாற்றவில்லை என்று  சொல்கிறார்கள். மேலும் திமுக கொள்கைகளை இயற்கையாக கொங்கு மண்டலம் ஏற்க மறுப்பது தான் அங்கு அந்த கட்சி வெற்றி பெற முடியாதற்கு காரணம் என்றும் சொல்கிறார்கள். மேலும் திமுக என்றாலே தொழில் நிறுவனங்களுக்கு ஆபத்து, கட்டப்பஞ்சாயத்து, காதல் கலப்புத் திருமணங்களுக்கு ஆதரவு போன்ற ஒரு மனநிலை கொங்கு மண்டல மக்கள் மத்தியில் நிலவுவதும் அந்த கட்சிக்கு பாதகமான விளைவுகளை தேர்தலில் ஏற்படுத்துகிறது.

இதனை எல்லாம் கருத்தில் கொண்டு கொங்கு மண்டலத்தில் திமுகவை சீர்படுத்தி அங்கு கட்சிக்கு என்று செல்வாக்கை உருவாக்க கடந்த இரண்டு வருடங்களாகவே மு.க.ஸ்டாலின் முயன்று வருகிறார். ஆனால் கொங்கு மண்டலத்தில் களப்பணியாளர்களுக்கு திமுகவில் பற்றாக்குறையே நிலவி வருகிறது. இதனால் கொங்கு மண்டலத்தில் கட்சியை தூக்கி நிறுத்த முதலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்க ஸ்டாலின் திட்டமிட்டதாக சொல்கிறார்கள். மேலும் கொங்கு மண்டலத்திற்கு என்று தனியாக ஒரு பொறுப்பாளரை நியமிக்கவும் அவர் முடிவெடுத்ததாக சொல்கிறார்கள்.

அந்த வகையில் திமுகவின் மகளிர் அணிச் செயலாளராக இருக்கும் கனிமொழியை கொங்கு மண்டல திமுக பொறுப்பாளராக அறிவிக்க ஸ்டாலின் முடிவெடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக சொல்கிறார்கள். ஆனால் அறிவிப்பு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அது நிறுத்தப்பட்டதாக கூறுகிறார்கள். இதன் பின்னணியில் உதயநிதி ஸ்டாலினின் எதிர்ப்பு இருந்ததாக சொல்கிறார்கள். அதாவது கொங்கு மண்டலத்தை சரி செய்ய உதயநிதி ஸ்டாலின் விரும்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அத்தோடு கடந்த சில நாட்களாகவே உதயநிதி கொங்கு மண்டலத்தில் முகாமிட்டு கட்சியை சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

மேலும் கொங்கு மண்டலத்தில் தற்போதுள்ள நிர்வாகிகள் பலரும் உதயநிதி ஆதரவாளர்கள் என்றும் சொல்கிறார்கள். எனவே கொங்கு மண்டலத்தை சரி செய்யும் படலத்தில் தனது ஆதரவாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருப்பதாக கூறுகிறார்கள். எனவே தான் கடைசி நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்து கொங்கு மண்டல பொறுப்பாளராக கனிமொழி அறிவிக்கப்படுவதை உதயநிதி தரப்பு கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தியதாக பேச்சு அடிபடுகிறது. அதே சமயம் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை கொங்கு மண்டலத்திற்கு கனிமொழி தான் சரியான நபர் என்கிற முடிவிற்கு வந்துவிட்டதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வரு என்றும் அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

click me!