
திருச்சியை சேர்ந்த திமுக ஆதரவாளர் என்று கூறப்படும் நபரை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்ட நிலையில் அதை பார்த்து கொதித்துப்போன திமுக இணையதள விசுவாசிகளுக்கு ஆதரவாக களம் இறங்கி மானம் காத்துள்ளார் கனிமொழி.
திருச்சியை சேர்ந்தவர் வினோத். இவர் சமூக வலைதளங்களில் மீம்ஸ் வெளியிடுவதில் வல்லவர். ஆனால் ஒரு கட்சியில் இருக்கமாட்டார் என்கிறார்கள். சமீப காலமாக வினோத் திமுகவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இவர் திருச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது. பேமிலி மேன் 2 சீரிஸ் தமிழகத்தில் தடை செய்யப்படாத நிலையில் திமுக – நாம் தமிழர் கட்சி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து திமுகவினர் அவதூறு செய்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி வினோத்தும் பிரபாகரனை மிகவும் மோசமாக சித்தரித்து மீம் வெளியிட்டிருந்தார்.
இந்த மீமை பார்த்து நாம் தமிழர் கட்சியினர் மட்டும் அல்லாமல் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் அனைவரும் கொதித்துப்போயினர். ஆனால் திருச்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் ஒரு படி மேலே சென்று நாம் தமிழர் ஆதரவாளர்களுடன் சென்று வினோத் வீட்டிற்குள் புகுந்து மிரட்டியுள்ளனர். அத்தோடு அவரை தாக்கவும் முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அங்கு போலீசார் வர வினோத் தரப்பிற்கும் – சாட்டை துரைமுருகன் தரப்பிற்கும் சமாதானம் பேசப்பட்டுள்ளது. அப்போது வினோத் பிரபாகரன் குறித்து பேசியது தவறு என்று வீடியோ வெளியிட்டால் விட்டுவிடுகிறோம் என சாட்டை துரைமுருகன் எகிறியுள்ளார்.
இதனை ஏற்று வினோத் போலீசார் முன்னிலையிலேயே வீடியோ வெளியிட பிரச்சனை அப்படியே முடிந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் வினோத்தின் மன்னிப்பு வீடியோவை பார்த்து திமுகவினர் கொதிக்க ஆரம்பித்துவிட்டனர். நடப்பது திமுக ஆட்சிதானா? என்று அவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். ட்விட்டர், பேஸ்புக்கில் திமுக ஆதரவாளர்களாக அறியப்பட்ட பலரும் திமுக ஆட்சியில் திமுக ஆதரவாளர் ஒருவரை நாம் தமிழர் கட்சியினர் மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட வைக்கிறார்கள் என்றால் நாம் ஏன் திமுகவிற்கு உழைக்க வேண்டும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
மேலும் சமூக வலைதளங்களில் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு திமுக ஆட்சியிலேயே பாதுகாப்பு இல்லை என்றும் கருத்துகளை வெளியிட ஆரம்பித்தனர். மேலும் முதுகெலும்பில்லாத எடப்பாடி பழனிசாமியின் அரசே கூட பரவாயில்லை என்று தோன்றுவதாக திமுகவினர் கூற இணையதளம் பற்றிக் கொண்டு எரிந்தது. திமுகவினருக்கு திமுக தலைமையிடம் இருந்தே ஆதரவு இல்லை என்கிற ரீதியில் விஷயம் மாற, அண்ணா அறிவாலயம்,திமுக, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை டேக் செய்து திமுகவினர் நியாயம் கேட்க ஆரம்பித்தனர்.
இதற்கிடையே நேற்று இரவு திடீரென சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். மேலும் வினோத்தை வீடு தேடிச் சென்று மிரட்டிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் போலீசாரிடம் சிக்கினர். சம்பவம் நடைபெற்ற போது அருகே இருந்த போலீசார் இரவு நேரத்தில் சென்று சாட்டை துரைமுருகனை கைது செய்ய மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு தான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் இந்த விவகாரத்தில் தலையிட்டது கனிமொழி தான் என்கிறார்கள். ட்விட்டரில் பலரும் கனிமொழியை டேக் செய்து திமுகவினருக்கு திமுக ஆட்சி காலத்திலேயே பாதுகாப்பு இல்லை என்று கூறியதைன் பின்னணியை கனிமொழி ஆராய்ந்துள்ளார்.
மேலும் சாட்டை துரைமுருகன் இதற்கு முன்பு கலைஞர் தொடங்கி ஸ்டாலின், உதயநிதி வரை பலரையும் இழிவுபடுத்தும் வகையில் வீடியோ போட்டிருப்பதை பார்த்து திருச்சி மாநகர கமிஷ்னரிடம் நேரடியாக பேசியதாக சொல்கிறார்கள். இதனை அடுத்தே இரவோடு இரவாக போலீசார் துரைமுருகனை தூக்கியுள்ளனர். இதன் பிறகே முதல் நாளில் கொதியாய் கொதித்த திமுகவினர் ஆறுதல் அடைந்தனர். மேலும் கனிமொழி தான் இதற்கு காரணம் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.