அரியலூரில் வைத்து உதயநிதியை மிரட்டி விரட்டிய ஜி.கே.வாசன் படை..! ஏன் தெரியுமா?

By Selva KathirFirst Published Dec 25, 2020, 12:06 PM IST
Highlights

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்று பிரச்சாரம் செய்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அரியலூரில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர் த.மா.காவினர்.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்று பிரச்சாரம் செய்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அரியலூரில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர் த.மா.காவினர்.

அரியலூர் மாவட்டம் திருமானூரில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து திருமானூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மூப்பனார் திறந்தவெளி அரங்கில் திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் மேடைக்கு மேலே இருந்த மூப்பனார் அரங்கம் என்கிற பெயரை துணியை போட்டு மறைத்து வைத்திருந்தனர் திமுகவினர். அதாவது தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ஜி.கே.வாசனின் தந்தை தான் ஜி.கே.மூப்பனார்.

அவர் நினைவாகவே திருமானூரில் உள்ள திறந்த வெளி அரங்கின் மேடைக்கு மூப்பானார் அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அதனை மறைத்து திமுகவினர் தேர்தல் பிரச்சாரம் செய்ததது அங்கிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனை அடுத்து திமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்த திமுகவினரை சந்தித்து மூப்பனார் பெயரை மறைத்தது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போதே இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

த.மா.கா தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளதால் அந்த கட்சியின் தலைவர் பெயர் இருக்கும் மேடையில் நாங்கள் எப்படி பிரச்சாரம் செய்வது என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர். அதனால் தான் மூப்பனார் பெயரை மறைத்ததாகவும் அவர்கள் கூறினர். அதற்கு, மூப்பனார் பெயர் பிடிக்கவில்லை என்றால் அவர் பெயர் உள்ள அரங்கில் ஏன் நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்? வேறு இடத்திற்கு செல்ல வேண்டியது தானே என்று த.மா.காவினர் போர்க்கொடி தூக்கினர். இதனால் திமுக – த.மா.கா இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதனிடையே திருமானூருக்கு உதயநிதி வரும் தகவல் அறிந்து அவருக்கு கருப்புக் கொடி காட்ட த.மா.கா கட்சியினர் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தனர். த.மா.காவினருடன் தான் தகராறு என்று அந்த கட்சியினரை உதயநிதி தரப்பு குறைவாக மதிப்பிட்டுவிட்டது. இந்த நிலையில் உதயநிதியின் பிரச்சார வாகனத்தை பார்த்ததும் பாய்ந்த த.மா.காவினரை காங்கிரஸ் என நினைத்து ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தியுள்ளார். காரணம் அவர்கள் கைகளில் இருந்த கொடி. வாகனம் நின்றதும் நேராக அதில் தொற்றிய த.மா.காவினர் உதயநிதியை கையை நீட்டி மிரட்ட ஆரம்பித்தனர்.

அப்போது சிலர் கைகள் உதயநிதி மீதும் பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என நினைத்து உதயநிதியும் அவர்களிடம் பேசும் போது பிரச்சனையின் வீரியம் தெரியவந்தது. இதனை அடுத்து உதயநிதியுடன் வந்தவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுமாறு கூற டிரைவர் வாகனத்தை எடுக்க அதற்குள் த.மா.காவினர் உதயநிதியை ஒரு மிரட்டு மிரட்டிவிட்டனர். இதனால் அவரது முகமே பதறிப்போய்விட்டது. மேலும் பயமும் அவர் கண்களில் தெரிந்தது. வாகனம் சரியான நேரத்தில் புறப்பட்டதால் உதயநிதி அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தப்பித்துள்ளார். மூப்பனாரின் தொண்டர்கள் தற்போதும் எந்த அளவிற்கு அவருக்கு விசுவாசமாக உள்ளனர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

click me!