குடியுரிமைச் சட்ட மசோதாவை ஆதரிக்க மாட்டோம் ! உத்தவ் தாக்ரே அதிரடி பல்டி !!

By Selvanayagam PFirst Published Dec 10, 2019, 9:37 PM IST
Highlights

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த சிவசேனா, தற்போது திருத்தம் செய்யவில்லை எனில் ராஜ்யசபாவில் ஆதரவு அளிக்க மாட்டோம் என அதிரடியாக பல்டி அடித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ்,  தேசியவாத காங்கிரஸ்  கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு சிவசேனாவின் 18 உறுப்பினர்கள் உட்பட 311 பேர் ஆதரவளித்தனர். இதன்மூலம் பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நாளை மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்படுகிறது.

காங்கிரஸ்  உள்ளிட்ட 80 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், மகாராஷ்ட்ராவில் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா ஆதரவு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதற்கு அக்கட்சி சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற, பால் தாக்கரேவின் கனவை நிறைவேற்றும் வகையிலேயே, மசோதாவிற்கு ஆதரவு அளிக்கப்பட்டது என சிவசேனா தெரிவித்திருந்தது.

மேலும், அகதிகளாக வருவோருக்கு, ஒருவேளை குடியுரிமை அளிக்கப்பட்டாலும், அவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு, ஓட்டளிக்கும் உரிமை வழங்க கூடாது என வலியுறுத்தியது.

காங்கிரஸ்  முன்னாள் தலைவர் ராகுல், குடியுரிமை திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதனை ஆதரிப்பவர்கள் இந்திய அடிப்படை கட்டமைப்பை அழிக்க முயற்சிக்கிறவர்கள், என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். 

இதனால், கூட்டணியில் இருக்கும் இருகட்சிகள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவியதால் மகாராஷ்ட்ரா  அரசியலில் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, மாநிலங்களவையில் இந்த  மசோதாவிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

மக்களவையில்  நேற்று நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எங்களுக்கு பதில்கள் கிடைக்கவில்லை. உரிய திருத்தங்கள் செய்யவில்லை எனில் நாங்கள் மசோதாவுக்கு ஆதரவளிக்க மாட்டோம், என்று தெரிவித்தார்.

click me!