உதயநிதி விஸ்வரூபம்.. மு.க.ஸ்டாலின் மவுனம்.. எரிச்சலில் திமுக சீனியர்கள்.. அதிகரிக்கும் அதிருப்தி..!

By Selva KathirFirst Published Aug 10, 2020, 10:05 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் உதயநிதி ஸ்டாலின் திடீரென அதிகார மையமாகியிருப்பது அக்கட்சியின் சீனியர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளதன் விளைவே தொடர்ந்து அதிகரிக்கும் அதிருப்தி என்கிறார்கள்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் உதயநிதி ஸ்டாலின் திடீரென அதிகார மையமாகியிருப்பது அக்கட்சியின் சீனியர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளதன் விளைவே தொடர்ந்து அதிகரிக்கும் அதிருப்தி என்கிறார்கள்.

கலைஞர் சுய நினைவுடன் திமுக தலைவராக இருந்த வரை எந்த ஒரு முடிவும் அவரது விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதாக இருந்தது. மு.க.ஸ்டாலின் திமுக பொருளாராக இருந்த போதும், கட்சி நிர்வாகிகள் நியமனம் விவகாரத்தில் கலைஞர் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. மு.க.ஸ்டாலின் விரும்புகிறார் என்பதற்காகவே கட்ச நிர்வாகிகள் நியமனத்தில் சமரசம் செய்து கொள்வதை கலைஞர் தவிர்த்து வந்தார். திமுகவில் நீண்ட காலமாக இருந்த மாவட்டச் செயலாளர்களை நீக்கிவிட்டு புதியவர்களை ஸ்டாலின் நியமித்த போது கடைசி வரை கலைஞர் போராடி முக்கியமானவர்களை காப்பாற்றினார்.

தஞ்சை பழனிமாணிக்கம் உள்ளிட்ட ஒரு சிலரைத்தான் கலைஞரால் காப்பாற்ற முடியவில்லை. அந்த வகையில் கலைஞர் இருக்கும் வரை ஸ்டாலினால் முழு அதிகாரத்துடன் செயல்பட முடியாத நிலையே இருந்தது.  இதனால் கட்சி நிர்வாகிகளை பொறுத்தவரை கலைஞரை அணுகி தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தனர். இதனால் கலைஞர் – ஸ்டாலின் என இரண்டு பேரையும் நிர்வாகிகளால் சமாளிக்க முடிந்தது என்று கூறுகிறார்கள். ஆனால் தற்போதே ஸ்டாலினை மீறி உதயநிதி சில முடிவுகளை எடுக்கிறார் என்கிறார்கள். உதயநிதி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஓகே சொல்லும் நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்படுகிறார் என்றும் கூறுகிறார்கள்.

அதாவது கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் ஸ்டாலினை எப்படி சமாதானம் செய்வது என்கிற தந்திரத்தை உதயநிதி தரப்பு தெரிந்து வைத்துள்ளதாக சொல்கிறார்கள். தங்கள் தந்திரங்களை பயன்படுத்தி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உதயநிதி தரப்பு பதவிகளை வெகு சுலபமாக பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது. அதிலும் உதயநிதியுடன் நெருக்கமாக இருக்கும் அன்பில் மகேஷ், ஜின்னா போன்றோர் இளைஞர் அணி நிர்வாகிகளை திமுகவின் நிர்வாகிகளாக மாற்றி வருகின்றனர். இதன் பின்னணியில் தங்களின் எதிர்கால அரசியலை மனதில் வைத்து அவர்கள் கணக்கு போடுவதாக சொல்கிறார்கள்.

இளைஞர் அணியில் இத்தனை நாட்கள் தங்களுக்கு விசுவாசமாக இருந்தவர்களை மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகளில் தற்போதே அமர்த்துவது தான் சிறந்து என்று உதயநிதி தரப்பு நம்புவதாக கூறுகிறார்கள். கலைஞர் இருக்கும் வரை ஸ்டாலின் ஒருவரை ஒரு பதவிக்கு கொண்டு வர நினைத்தால் அதன் பின்னணியை அறிந்து அதற்கு ஏற்ப முடிவு எடுத்து வந்தார். ஆனால் தற்போது ஸ்டாலினுக்கு அப்படி ஒரு வாய்ப்பே இல்லாமல் இளைஞர் அணி நிர்வாகிகள் திமுகவின் முக்கிய பதவிகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தான் சீனியர்களின் டென்சனுக்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

கு.க.செல்வம் இப்படி உதயநிதி தரப்பால் பாதிக்கப்பட்டு தான் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதே போல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த நிர்வாகிகள் அதாவது ஸ்டாலினால் முன்னுக்கு வந்தவர்கள் தறபோது எரிச்சல் அடைந்துள்ளனர். காரணம் அவர்களை ஓரங்கட்டிவிட்டு கட்சிக்கு அண்மையில் வந்த இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கட்சி தொடர்பான முக்கிய பணிகள் பல, மாவட்டச் செயலாளர்களுக்கே தெரியாமல் இளைஞர் அணி நிர்வாகிகள் மூலம் செயல்படுத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

ஒரு காலத்தில் கலைஞர் இருந்தார் அவருக்கு விசுவாசமாக இருந்தோம், இப்போது ஸ்டாலின் இருக்கிறார் அவருக்கும் விசுவாசமாக இருக்கிறோம், ஆனால் தற்போது வந்த உதயநிதி இந்த விசுவாசத்தை எல்லாம் மறந்து தன் இஷ்டத்திற்கு கட்சியை நடத்துவது என்பது இத்தனை நாள் நாங்கள் விசுவாசமாகஇருந்ததற்கான பரிசா? உதயநிதிக்கு விசுவாசமாக இருந்தாலும் அவர் எங்களை அனுசரித்து செல்வார் என்பதற்கு என்ன உறுதி என்றும் திமுக சீனியர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் ஒரே நேரத்தில் ஸ்டாலின் – உதயநிதி என இரண்டு பேருக்கும் விசுவாசமாக இருக்க முடியுமா? என்றும்அவர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

click me!