சட்டமன்ற தேர்தல் கூட்டணி.. எடப்பாடி போட்ட அதிரடி குண்டு.. அதிமுக வியூகம் என்ன?

By Selva KathirFirst Published Aug 10, 2020, 9:57 AM IST
Highlights

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது தான் அதிமுகவின் தேர்தல் வியூகம் என்று சொல்லப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது தான் அதிமுகவின் தேர்தல் வியூகம் என்று சொல்லப்படுகிறது.

அதிமுக – பாஜக கூட்டணி தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டியும் ஒட்டாமல் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. சட்டமன்ற தேர்தலில் பாஜகவை நாம் தூக்கி சுமக்க கூடாது என்று அதிமுக தலைமையிடம் முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் கந்த சஷ்டி கவசம், பெரியார் சிலை அவமதிப்பு விவகாரங்களில் அதிமுக மேலிடம் எடுத்த நடவடிக்கை பாஜகவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

அதே சமயம் தமிழகத்தில் மத ரீதியாக வாக்கு வங்கியை உருவாக்க பாஜக கடந்த சில வாரங்களாக பகீரத முயற்கிளை மேற்கொண்டு வருகிறது. முருகப்பெருமானை பாஜக அரசியலுக்கு பயன்படுத்த தொடங்கியுள்ளதை அதிமுக ரசிக்கவில்லை என்கிறார்கள். மேலும் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்ட விவகாரம் அக்கட்சியை எரிச்சல் அடைய வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இது தவிர, கூட்டணியில் பாஜகவை வைத்திருப்பதால் சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக இழப்பதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கடும் போட்டி காத்திருக்கும் நிலையில் ஒரு சில வாக்குகள் சில சில தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதையும் அதிமுக புரிந்து வைத்துள்ளது. இதனால் சிறுபான்மையினர் வாக்குகளை ஒட்டு மொத்தமாக இழப்பது என்பது சட்டமன்ற தேர்தலில் அதிமுகவி.ற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அதிமுக கருதுகிறது. இதனால் சட்டமன்ற தேர்தலுக்குபுதிய கூட்டணி வியூகம் அமைக்க வேண்டும் என்று அதிமுக மேலிடம் கருதத் தொடங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

இதனை மனதில் வைத்து தான் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பேசப்படுகிறது. அதாவது சட்டமன்ற தேர்தலுக்கு புதிய கூட்டணி வியூகத்தை அதிமுக முயற்சிப்பதாக சொல்கிறார்கள். அதிமுக கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளில் தேமுதிக மட்டுமே கூட்டணியில் 100 சதவீதம் தொடரும் சூழல் உள்ளது. பாமகவை பொறுத்தவரை கடைசி நேரத்தில் அந்த கட்சி எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கும் என்று சொல்கிறார்கள். இதனால் வேறு சில கட்சிகளுக்கும் கூட்டணி கதவுகளை திறக்க அதிமுக தயாராகவே உள்ளதாக கூறுகிறார்கள்.

பாமக திமுக கூட்டணிக்கு செல்லும் பட்சத்தில் விசிக அங்கிருந்து வெளியேறும்.எ னவே அதிமுக கூட்டணியில் விசிக இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதே போல் கூட்டணி தொகுதிப்பங்கீட்டில் திமுக கடுமை காட்டும் நிலையில் காங்கிரஸ் கட்சி கூட வேறு சில வாய்ப்புகளை தேடும் என்றும் அப்போது அவர்களை தங்கள் பக்கம் இழுக்க கூட அதிமுக தயங்காது என்று சொல்லப்படுகிறது. இது தவிர அதிமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க ஜெயலலிதா பாணியில் 3வது அணி அதாவது அதிமுகவின் பி டீம் ஒன்றை உருவாக்க முடியுமா என்றும் முயற்சிகள் நடைபெறுவதாக கூறுகிறார்கள்.

3வது அணி அமையும் பட்சத்தில் அதிமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து அதிமுகவிற்கு சாதகமான சூழலை தேர்தலில் ஏற்படுத்தும் என்பது மேலிடத்தின் கணக்கு., இப்படி பல்வேறு வியூகங்களை அதிமுக மேற்கொண்டு வருவதால் தான் கூட்டணி விஷயத்தில் முன்பு போல் தங்கள் கூட்டணி தொடர்வதாக கூறாமல் தேர்தல் நேரத்தில் முடிவு என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.

click me!