இதைச் சொல்ல நீங்க எதற்கு..? கடவுள் இருந்தால் உங்களை தண்டிப்பான்.. எடப்பாடியரை ஆவேசமாக விமர்சித்த உதயநிதி!

By Asianet TamilFirst Published Jun 21, 2020, 9:28 AM IST
Highlights

உதயநிதி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “‘இதுக்குமேல எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பான்’ – பக்தர்கள் சொல்லும் கடைசி வார்த்தைகள் இவை. ஆனால் இதைச் சொல்ல ஒரு முதல்வர் எதற்கு? உங்களின் இயலாமையால் எத்தனையெத்தனை மரணங்கள். கடவுள் உங்களைப் பார்த்துக்கொள்ளமாட்டான் தமிழக முதலமைச்சர் அவர்களே, இருந்தால் உங்களை தண்டிப்பான். #savechennai” என்று உதயநிதி பதிவிட்டுள்ளார். 
 

உங்களின் இயலாமையால் எத்தனையெத்தனை மரணங்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் எகிறியவண்ணம் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் தமிழகத்தில்தான் அதிகம் உள்ளனர். எனவேதான், நோய் பரவல் அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எப்போது கட்டுக்குள் வரும் என்று செய்தியாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “நோய் எப்படி வருகிறது, எப்படி குறையுது என்பது தெரியாது. பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த, சிகிச்சை அளிக்க, அரசு நடவடிக்கை எடுக்கிறது. சென்னையில் இருந்து செல்வோரால் மற்ற மாவட்டங்களிலும் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்நோய் எப்போது குறையும் என்பது யாருக்கும் தெரியாது; கடவுளுக்குத்தான் தெரியும். இந்த நோயைப் படிப்படியாகத்தான் குறைக்க முடியும். நோயிடமிருந்து தப்பிக்க ஒவ்வொருவரும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேணடும். மக்கள் ஒத்துழைப்பு வழியாகத்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.


இந்நிலையில் முதல்வரின் இந்தப் பேட்டியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக உதயநிதி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “‘இதுக்குமேல எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பான்’ – பக்தர்கள் சொல்லும் கடைசி வார்த்தைகள் இவை. ஆனால் இதைச் சொல்ல ஒரு முதல்வர் எதற்கு? உங்களின் இயலாமையால் எத்தனையெத்தனை மரணங்கள். கடவுள் உங்களைப் பார்த்துக்கொள்ளமாட்டான் தமிழக முதலமைச்சர் அவர்களே, இருந்தால் உங்களை தண்டிப்பான். #savechennai” என்று உதயநிதி பதிவிட்டுள்ளார். 

click me!