வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என்னுடைய செயல்பாடு தக்க பதிலடியாக இருக்கும் ! உதயநிதி ஸ்டாலின் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jul 5, 2019, 7:59 AM IST
Highlights

தி.மு.க.வை வளர்ப்பதற்கும், இளைஞரணியை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கும், இளைஞரணியில் மேலும் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பதே என்னுடைய முதலாவது இலக்காக இருக்கும் என்று  கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின் , வாரிசு அரசியல் என்ற விமர்சனத்துக்கு என்னுடைய செயல்பாடுகள் தக்க பதிலடியாக இருக்கும் என கூறினார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், எனக்கு கொடுக்கப்பட்டுள்ளதை பதவி என்று நான் சொல்லமாட்டேன். பொறுப்பாக கருதியே என்னிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கிறார் என தெரிவித்தார். 

என் மீது நம்பிக்கை வைத்து இந்த மிகப்பெரிய பொறுப்பை வழங்கியதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல வாழ்த்துகளை தெரிவித்த மாவட்ட செயலாளர்களுக்கும், கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு இந்த பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாகவும், பொறுப்பாகவும் நான் கருதவில்லை. ஒட்டுமொத்த தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என்னுடைய செயல்பாடு தக்க பதிலடியாக இருக்கும் என அதிரடியாக தெரிவித்தார்.

நான் தொடக்கத்தில் இருந்து கூறி வருவது போன்று தொண்டர்களில் ஒருவராக இருப்பதையே விரும்புகிறேன். இந்த பொறுப்பில் நிறைய சவால்கள், பணிகள் இருக்கிறது. அதனை பேசுவதை விடவும் செயல்களில் காண்பிப்பதையே நான் விரும்புகிறேன்.

தி.மு.க.வை வளர்ப்பதற்கும், இளைஞரணியை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கும், இளைஞரணியில் மேலும் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பதே என்னுடைய முதலாவது இலக்காக இருக்கும். 

2 படங்களுக்கான படப்பிடிப்புகள் இருக்கிறது. இருந்தாலும் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகாக்க நேரத்தை ஒதுக்கி செலவிடுவேன். உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

click me!