ராகுலுக்கு பிறகு தலைவர் யார்...? மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் காங்கிரஸ்!

By Asianet TamilFirst Published Jul 5, 2019, 7:06 AM IST
Highlights

பிரியங்காவை காங்கிரஸ் தலைவரா நியமிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்களின் ஒரு பிரிவினர் வற்புறுத்திவருவதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முதல்வர்கள் ஆகியோர் இந்திராகாந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திவருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அந்தப் பொறுப்பை ஏற்க பிரியங்கா முன்வருவாரா என்ற சந்தேகமும் உள்ளது. 

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்துவிட்ட நிலையில், புதிய தலைவரை தேர்வு 7 காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. வெறும் 52 இடங்களை மட்டுமே வென்ற அக்கட்சியால், எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெறமுடியவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்துவிட்டார். அவரை சமாதானம் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் எவ்வளவோ முயன்றும் ,அது நிறைவேறவில்லை. கடந்த ஒரு மாதமாக மெளனம் காத்துவந்த ராகுல், கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தார். புதிய தலைவரை தேர்வு செய்யும்படியும் ராகுல் அறிவுறுத்தியிருந்தார்.


ராகுல் அதிகாரபூர்வமாக விலகிவிட்டதால், புதிய தலைவரை தேர்வு செய்யும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. தற்போது அதற்கான நடவடிக்கைகளை அக்கட்சி தொடங்கியிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் விதிமுறைப்படி புதிய தலைவரை தேர்வு செய்ய அக்கட்சியின் காரிய கமிட்டி கூட வேண்டும். அந்த கமிட்டிக்குதான் புதிய தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் உள்ளது. 
அந்த கமிட்டி கூடும்வரை இடைக்கால தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா கட்சி பொறுப்பை கவனிப்பார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் விதிகளின்படி தலைவர் விலகிவிட்டாலோ, தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டலோ, கட்சியின் மூத்த பொதுச்செயலாளர் கட்சி தலைவர் பொறுப்பை கவனிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது 90 வயதான வோரா, கட்சி பொதுச்செயலாளராக இருப்பதால், அவரே இடைக்கால தலைவராக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

 
இதற்கிடையே புதிய தலைவரை தேர்வு செய்ய 7 காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுவருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அசோக் கெலாட், சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக், ஆனந்த் சர்மா, சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவருவதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவரை காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யும்பட்சத்தில், காரிய கமிட்டி கூடி அதற்கு ஒப்புதல் பெறப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் பிரியங்காவை காங்கிரஸ் தலைவரா நியமிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்களின் ஒரு பிரிவினர் வற்புறுத்திவருவதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முதல்வர்கள் ஆகியோர் இந்திராகாந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திவருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அந்தப் பொறுப்பை ஏற்க பிரியங்கா முன்வருவாரா என்ற சந்தேகமும் உள்ளது.

click me!