
ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது முக்கிய கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறுகிறது. தவெக நிறுவனரும், முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம், தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, அரசின் செயல்பாடுகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் பங்களிப்பை முறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்குப் பிந்தைய நிலையில் கூட்டணியின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, அதனை ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொது குறைந்தபட்ச செயல்திட்டம் (Common Minimum Programme) ஒன்றை உருவாக்குவது, கூட்டணியின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் வழிகாட்டுதல் குழுவை அமைப்பது, கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமான பெயரை இறுதி செய்வது போன்ற விவகாரங்கள் முக்கியமாக இடம்பெறலாம். மேலும், கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொள்வதற்கான நடைமுறைகள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.
யார் யார் பங்கேற்கிறார்கள்?
தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ், விசிக, IUML மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இடதுசாரிகளின் நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
கூட்டத்தை புறக்கணிக்கும் இடதுசாரிகள்
தவெக கூட்டணியின் முக்கிய கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது என அக்கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ கட்சியும் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. அமைச்சரவையில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல், முறையான கூட்டணி கட்டமைப்பில் இணைய விருப்பமில்லை என்பதே இடதுசாரிகளின் முக்கிய நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது.
சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம், தவெக அரசுக்கு தங்களது ஆதரவு நிபந்தனைகளின் அடிப்படையிலானது என்றும், அமைச்சரவையில் இடமின்றி முறையான கூட்டணியில் இணைவதில் தங்களுக்கு விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.இதனால், ஆளும் கூட்டணிக்குள் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரண்டாவது முறையாக புறக்கணிப்பு
தவெக சார்பில் நடைபெறும் முறையான கூட்டணி ஆலோசனைகளை இடதுசாரிகள் புறக்கணிப்பது இது இரண்டாவது முறையாகும். இதன் மூலம், கூட்டணியில் தங்களது அரசியல் சுயாதீனத்தைத் தொடர்ந்து பாதுகாக்க இடதுசாரிகள் விரும்புகின்றனவா என்ற விவாதமும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்குவதற்கும், அரசின் முக்கிய கொள்கைகள் மீது தங்களது கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பதற்கும் இடதுசாரிகள் விரும்புவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
பிரதமர் வேட்பாளர் விவகாரம்... கூட்டணியில் உரசல்?
கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெறும் நேரத்தில், மற்றொரு விவகாரமும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக மற்றும் காங்கிரஸ் தரப்புகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தவெக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நாட்டின் உயரிய அரசியலமைப்பு பதவி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவருக்கு கிடைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை விஜய்யை முன்னிறுத்தும் அரசியல் நிலைப்பாடாக சிலர் பார்த்தனர். மேலும், ஒரு தனியார் ஊடகக் கணக்கெடுப்பில் 2029-ம் ஆண்டு பிரதமர் பதவிக்கு விருப்பமான போட்டியாளர்களில் ஒருவராக விஜய்யின் பெயரும் இடம்பெற்றதாக கூறப்பட்டது.
காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு
இந்த விவகாரம் கூட்டணிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியது. 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஆதரிக்காவிட்டால், காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், தவெக–காங்கிரஸ் கூட்டணிக்குள் பிரதமர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்தக் கருத்து தொடர்பாக அமைச்சர் ராஜமோகன் விளக்கம் அளித்தார். அது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கிடையாது என்றும், பாசத்தின் அடிப்படையில் கூறப்பட்ட கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று என்ன முடிவு எடுக்கப்படும்?
இதனால் இன்று நடைபெறும் கூட்டம் அரசியல் ரீதியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியின் அதிகாரப்பூர்வ பெயர் என்ன? பொது குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படுமா? வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுமா? கூட்டணி கட்சிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்பு நடைமுறை உருவாக்கப்படுமா? இடதுசாரிகளின் கோரிக்கைகள் குறித்து என்ன முடிவு எடுக்கப்படும்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தெளிவு கிடைக்கலாம். ஒருபுறம் கூட்டணியை கட்டமைக்க தவெக தீவிரம் காட்டி வரும் நிலையில், மறுபுறம் இடதுசாரிகளின் புறக்கணிப்பு மற்றும் பிரதமர் வேட்பாளர் தொடர்பான கருத்து மோதல் ஆகியவை அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால், பனையூரில் இன்று நடைபெறும் தவெக கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் முடிவுகள் தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.