கனிமொழியைத் துரத்தும் தேர்தல் வழக்கு... ஒரு புறம் தமிழிசை வழக்கை வாபஸ் பெற்றார்... இன்னொரு புறம் வாக்காளர் மனுதாக்கல் செய்தார்!

By Asianet TamilFirst Published Nov 6, 2019, 11:03 PM IST
Highlights

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். மேலும் தூத்துக்குடியைச் சேர்ந்த வாக்காளர் சந்தானராஜ் என்பவரும் கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்.
 

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தெலங்கானா ஆளுநர் தமிழிசை வாபஸ் பெற்றுவிட்ட நிலையில், அந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் வழக்கு தொடர அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
  நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை தோல்வியடைந்தார். தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். மேலும் தூத்துக்குடியைச் சேர்ந்த வாக்காளர் சந்தானராஜ் என்பவரும் கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜனை தெலங்கானா மாநில  ஆளுநகராக மத்திய அரசு நியமித்தது. இதையடுத்து கனிமொழிக்கு எதிராகத் தொடர்ந்த தேர்தல் வழக்கை தமிழிசை சவுந்தரராஜன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக தமிழிசையின் அறிவிப்பை அரசிதழில் வெளியிடவும் பத்திரிகையில் விளம்பரமாகவும் வெளியிட உயர் நீதிமன்றம் தமிழிசைக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், “ கனிமொழி வெற்றியை எதிர்த்து தெலங்கானா  ஆளுநர் தமிழிசை தொடர்ந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றுள்ளார். இதுகுறித்து விளம்பரத்தையும் தமிழிசை செய்துள்ளார். அந்தப் பத்திரிகை விளம்பரத்தை பார்த்தே இந்த மனுவை தாக்கல் செய்கிறேன். கனிமொழி தேர்தல் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர நான் விரும்புகிறேன். இதற்கு  நீதிமன்றம் அனுமதி வழங்கவேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி, மனு தாக்கல் செய்ய தேவையான கட்டணத்தை  நீதிமன்ற பதிவுத்துறையில் செலுத்த மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணை வரும் 11-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே சந்தானராஜ் என்ற வாக்காளர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இன்னொரு வாக்காளரும் தேர்தல் வழக்கு தொடர மனு செய்துள்ளார்.

click me!