டிடிவி.தினகரன் பிரச்சாரத்துக்கு தடையா..? தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு..!

By vinoth kumarFirst Published May 15, 2019, 10:56 AM IST
Highlights

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனின் பிரச்சாரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மனு அளித்துள்ளது.  

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனின் பிரச்சாரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மனு அளித்துள்ளது.  

இது தொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது: அதில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் நேற்று முன்தினம் மாலை, சூலூரில் டிடிவி.தினகரன் பிரசாரம் செய்தார். 

அப்போது விதிகளுக்கு மாறாக முதல்வர், துணை முதல்வரை ஒருமையில் பேசி தன்னுடைய வேட்பாளருக்கு தேர்தல் பிரசாரம் செய்தார். மேலும் நீதிமன்றங்களை விமர்சிக்கின்ற விதமாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்து முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்துள்ளார். இது முழுவதுமான தேர்தல் நடத்தை விதிமீறல் மட்டும் அல்லாது, நீதிமன்ற அவமதிப்பாகும். மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவசர கால ஊர்திக்குத் கூட அவர் வழிவிடாமல், நாகரிகமற்ற முறையில் பேசியுள்ளார். 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்போது நீதிமன்ற காவலில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் செயலை நியாயப்படுத்தும் விதமாகவும் பேசி வருகிறார். எனவே, தனிநபர் விமர்சனத்தில் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டும், முதல்வர், துணை முதல்வரை ஒருமையில் பேசியும், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் டிடிவி தினகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!