
திடீரென ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் தொகுதியில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான்தான் எம்எல்ஏ ஆவேன் என டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி.தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மீண்டும் எப்போது தேர்தல் நடத்தினாலும், அதில் நான் அதிக வாக்குகளை பெற்று, மாபெரும் வெற்றி பெறுவேன். நான் தான் அந்த தொகுதிக்கு எம்எல்ஏவாக வருவேன். அதில் மாற்றம் இல்லை.
எம்எல்ஏ குணசேகர் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின்னர், அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அவரிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்து, அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும்.
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேறு அணிக்கு போவதாகவும், பதவி ராஜினாமா செய்வதாகவும் செய்திகள் பரவுகிறது. அனைத்தும் வதந்தி. அதில் உண்மை இல்லை.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது அமைச்சர்கள் 2 பேர் அங்கு சென்றனர். அவரை பார்க்க வேண்டும் என அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர். அவர்களும் அனுமதி அளித்தனர். ஆனால், திடீரென நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இதை சட்டப்படி சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.