
கட்சியில் இருந்து ஒதுக்கியதையடுத்து கட்சியை விட்டு ஒதுங்கி கொள்வதாகவும், இதுவரை தனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகிலிருந்து தற்போது வரை அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நடைபெற்று வந்த குழப்பங்கள் ஒரு முடிவை எட்டியுள்ளது.
சசிகலாவின் ஆதிக்கம் அதிமுகவில் நிலைத்ததால் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாக திகழ்ந்த பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார்.
அதனால் அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானோர் ஒ.பி.எஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் வலுத்தது. இது பெரும்பாலான அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் வலுக்கட்டயத்தின் காரணமாகவே ஆட்சியை தக்க வைத்து வந்தனர்.
தற்போது அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.
இதில் விஜயபாஸ்கர் வசமாக சிக்கினார். மேலும் இது போன்ற நிலைமை நமக்கும் வந்து விடுமோ என்ற கலக்கத்தில் அதிமுக அமைச்சர்கள் திகைத்து போயுள்ளனர்.
இந்நிலையில், ஒ.பி.எஸ் போன்றே எனக்கும் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தல் வருவதாகவும் அமைச்சர்கள் பக்கபலமாக இருந்து ஒ.பி.எஸ் அணியுடன் இணைய உதவ வேண்டும் என்றும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து டிடிவி தினகரன் ஊரில் இல்லாத சமயம் பார்த்து அமைச்சர்கள் அனைவரும் ஒரு முடிவை எடுத்துள்ளனர்.
ஒ.பி.எஸ் வேண்டுகோளின் படியும், அமைச்சர்கள் மற்றும் கழக தொண்டர்கள் வேண்டுகோளின் படியும் சசிகலா, தினகரன் குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கி வைப்பதாக முடிவு எடுத்துள்ளனர்.
இந்த அதிகார பூர்வ முடிவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
மேலும் ஒ.பி.எஸ் பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேச தயார் எனவும் அமைச்சர்கள் அறிவித்தனர்.
இதுகுறித்த செய்தி தினகரன் காதிற்கு செல்ல, அமைச்சர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுகொள்ள தயார் எனவும் கட்சியில் இருந்து விலக்கியதால் நான் வருத்தப்படவில்லை எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர்கள் என்னிடம் கூறியிருந்தால் நானே விலகி இருப்பேன் என்றும், அவர்களுடன் தகராறு செய்யும் எண்ணம் எனக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்திலும் உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் தினகரன். அதில் கூறியிருப்பதாவது:
கட்சி பிளவு படக்கூடாது, ஒற்றுமையாக இருங்கள்; எனக்கு இதுவரை ஒத்துழைப்பு அளித்த அத்தனை கழக நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.