துரோகிகளால் இரட்டை இலையை எப்படி மீட்க முடியும்... - சவால் விடும் டிடிவி...

First Published Aug 22, 2017, 7:49 AM IST
Highlights
ttv dinakaran challenged to ops and eps


ஒபிஎஸ்சையும் இபிஎஸ்சையும் முதல்வராக்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்தவர்களை தொண்டர்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும், துரோகிகளால் இரட்டை இலையை எப்படி மீட்க முடியும் எனவும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. 

பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமை அலுவலகம் சென்ற ஒபிஎஸ் அங்கு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து ஒன்றாக இணைந்ததாக அறிவித்தார். 

மேலும் அங்கு ஒபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவியும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. 

பின்னர் பேசிய ஒபிஎஸ்சும், இபிஎஸ்சும் இரட்டை இலையை மீட்டு கட்சியை காப்பாற்றுவோம் என உறுதி மொழி எடுத்தனர். மேலும் சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் எம்.பி தெரிவித்தார். 

இந்நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, நேற்று நடந்தது இணைப்பே அல்ல எனவும், சில நபர்களின் சுயலாபத்திற்காகவும் பதவி ஆசைக்காகவும் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரீதியான உடன்படிக்கை எனவும் தெரிவித்துள்ளார். 

இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம் எனவும், தெரிவித்துள்ளார். 

1989ல் தொண்டர்களின்  விருப்பத்திற்கு இணங்க, அம்மா அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள் எனவும், இன்றோ, இவர்களாலேயே ஏற்று கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை  தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அம்மா அவர்களின் மறைவுக்கு பின் திரு பன்னீர்செல்வத்தையும் பின் திரு பழனிச்சாமியையும் முதல்வராக்கிய பொதுச்செயலாளருக்கு துரோகம் செய்த நபர்களை கழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள்   எனவும், இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோர்க்கும் அளவிற்கு சிலரது பதவி வெறி கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்று கொள்வார்கள்   எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.                    

இந்த துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்? எனவும், நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ? என வினவியுள்ளார்.                        

இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம்  தொடரும் எனவும்  துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை எனவும் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

click me!