“நாம் வெற்றி வாகை சூடத்தான் போகிறோம்... துரோகத்தை மொத்தமாக வீழ்த்தத்தான் போகிறோம்...” வெயிட் பண்ணுங்க மெர்சலாக்கும் தினா!

First Published Apr 24, 2018, 10:51 AM IST
Highlights
ttv dhinakaran statements against divakaran


வெற்றிவேல் நாம் வாகை சூடத்தான் போகிறோம், துரோகத்தை முற்றிலுமாக வீழ்த்தத்தான் போகிறோம் கொஞ்சம் காலம் பொறுமையாக இருங்கள் என தினகரன் கண்டித்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்ட நிலையில், சசிகலா - தினகரன் தரப்பினர் தனி அணியாகச் செயல்பட்டு வந்தனர். கட்சியையும் சின்னத்தையும் மதுசூதனன் தலைமையிலான அணி தேர்தல் ஆணையத்திடமிருந்து கைப்பற்றியது, இதனையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தினகரன் தொடங்கினார்.

இதற்கிடையே, சசிகலா சகோதரர் திவாகரன் அவரது மகன் ஜெயானந்துக்கும் தினகரனுக்கும் இடையே உரசல் இருந்துவருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் ஜெயானந்த் நேற்று தனது முகநூல் பக்கத்தில், மாபெரும் தவறுகளைப் பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் கலைக்கப்படும். என்னால் முடிந்த நல்லதை போஸ் மக்கள் பணியகம் சார்பில் செய்யப் போகிறேன். அரசியலில் செயல்படப் போவதில்லை. யாருக்கும் இடையூறாக இருக்கப் போவதில்லை. என்னைச் சீண்டி அரசியலில் இழுத்துவிட்டால்தான் உண்டு” என ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தார்.

ஜெய்ஆனந்தின் இந்த பதிவு, தினகரனைச் சாடியே அவர் இவ்வாறு பதிவிட்டிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரனி ஆதரவு எம்.எல்.ஏவும் வெற்றிவேல் தனது ஃ பேஸ்புக் பக்கத்தில், “மாண்புமிகு. அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழகத்தின் ஆணிவேராகச் சின்னம்மாவும், கழகத்தின் முகமாக துணை பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி தினகரனும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

மன்னிக்க முடியாத துரோகத்தாலும், மறக்க முடியாத சூழ்ச்சியாலும் சின்னம்மா அவர்கள் சிறைக்குச் சென்ற பிறகு, பல்வேறு அடக்குமுறைகள், அத்துமீறல்களுக்கும் மத்தியில் கழகத்தை வலிமையோடு, முன்னெடுக்கும் பணியில் துணை பொதுச் செயலாளர் அண்ணன் தினகரன் செயலாற்றி வருகிறார்.
அவருக்குப் பக்கத்துணையாக, நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு, தியாகத்தாயின் பின்னால், நான் உட்பட 18 + 3 சட்டமன்ற உறுப்பினர்களும், எண்ணிலடங்கா கழகத் தொண்டர்களும் அணிவகுத்து நிற்கிறோம்.

ஆனால், எங்கள் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கில், எங்கள் உணர்வைக் காயப்படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தைச் சார்ந்த திவாகரனும் ஜெயானந்த்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது.கடந்த ஆண்டு மறைந்த மகாதேவனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் மூளைச்சலவை செய்து அவர்களை நிரந்தரமாக எடப்பாடி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்குத் தெரியும்...

மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியக் கூடாது என்கிற காரணத்தினால்தான், சின்னம்மா நெஞ்சம் நிமிர்த்தி சிறைக்குச் சென்றார். ஆனால், ஏதோ தங்கள் பின்னால்தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகிப் போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சின்னம்மாவைச் சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திவாகரன் செயல்படுவது உண்மைக்குப் புறம்பானது. இதை முதலில் சின்னம்மா ஏற்றுக்கொள்வாரா? தங்களின் சுய லாபத்துக்காகக் கழகத்தையும், எங்களின் தியாகத்தையும் பலிக்கடாவாக முனையாதீர்கள். நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம். எங்களைக் குழப்பி, சுய லாபம் அடைய நினைக்காதீர்கள்

எடப்பாடி அணி நிர்வாகியான சத்திரப்பட்டி சிவகிரி என்பவர் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் திரு.திவாகரன் பின்னால்தான் இருக்கிறார்கள் என்பதைப் போன்ற ஒரு பொய் பரப்புரையைச் செய்கிறார். இவர் யார் தூண்டுதலின் பேரில் செயல்படுகிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும். இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒன்றைத் தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன், எங்கள் தலைமை சின்னம்மாவும், அண்ணன் தினகரனும்தான். இவர்கள் இருவரைத் தாண்டி, வேறு எவரின் கண்ணசைவுக்கும், குரலுக்கும் எங்கள் சிரம் அசையாது; எவருக்காகவும் எங்கள் தரம் மாறாது.

எதுவரினும் எவர் எதிர்ப்பினும் எங்கள் பயணம் என்றும் சின்னம்மாவுடனும் அண்ணன் டிடிவி தினகரனுடனும்தான் என்பதில் மலையளவு உறுதியோடு இருக்கிறோம்” என பதிவிட்டிருந்தார்.அவர் பதிவிட்ட சில மணி நேரத்தில் தினகரன் ஓர் அறிக்கை வெளியிட்டார்.அதில், “நம் மீது புனையப்பட்ட பொய் பிரசாரங்கள் அனைத்தையும் முறியடித்து இப்போது தமிழக மக்களின் பேரன்பைப் பெற்ற இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நாம் நிலைநாட்டியுள்ளோம்.

இந்த நிலையில், கழகத்தின் வீறுகொண்ட முன்னேற்றத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அனைத்து வழிகளிலும் நமது விரோதிகள் முயன்று வருகின்றனர். சமூக வலைதள ஊடகங்களின் வாயிலாக நமது லட்சியப் பயணத்தின் பாதையைத் திசை திருப்ப முயலும் கழக விரோத சிந்தனைக் கொண்டோரின் திட்டத்துக்கு ஒருபோதும் நாம் இடமளிக்கக் கூடாது.சமூக ஊடகத்தில் வெளியிடப்படும் சித்திரிக்கப்பட்ட பதிவுகளைப் பார்த்தவுடனேயே கருத்து தெரிவிப்பதை தவிர்த்துவிட்டு அச்செய்தியின் உண்மைத் தன்மையை ஊர்ஜிதம் செய்திட வேண்டும்.

பிரிவினையை, உண்மைக்கு மாறான செய்திகளை ஒருபோதும் நாம் நம் மத்தியில் அனுமதித்திட கூடாது. நாம் வெல்ல வேண்டிய களங்கள் இன்னும் ஏராளம் உள்ளன. அவை அனைத்தையும் நாம் வாகை சூடத்தான் போகிறோம். துரோகத்தை முற்றிலுமாக வீழ்த்தத்தான் போகிறோம். நமது சிந்தனையையும் கவனத்தையும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டிய தருணமிது. இதை திசை திருப்பும் எந்த ஒரு செயலும் கட்சி விரோத போக்கு என்பதைக் கருத்தில்கொண்டு எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஒருபோதும் ஆட்படாமல் அவற்றை வென்றுகாட்டுவோம்.” என வெற்றிவேலுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தினகரனின் இந்த அறிக்கையை பார்த்த திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் #என்நேற்றையபதிவின்நோக்கம் #நண்பர்களேநன்கு_கவனிக்கவும்
நான் அ.ம.மு.க என்று எங்கும் குறிப்பிடவில்லை... குறிப்பிடாமலே நான் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும் என ஏன் ஒரு சில நிர்வாகிகள் நினைக்கிறார்கள்??? எப்போது பிரச்சனை வரும் என ஒரு சிலர் நம் கூட்டத்திலேயே காத்திருப்பாதாக ஒரு சிலர் வாயிலாக அறிந்தேன். நம் தலைமை இதனை கண்டறியும் என நம்புகிறேன். பதிவிட்டுள்ளார்.

click me!