இன்று தமிழகத்தில் அ.தி.மு.க. தனிமைப்பட்டு கிடக்க எடப்பாடிதான் காரணம் - திருமாவளவன் பகீர்...

 
Published : Apr 24, 2018, 10:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
இன்று தமிழகத்தில் அ.தி.மு.க. தனிமைப்பட்டு கிடக்க எடப்பாடிதான் காரணம் - திருமாவளவன் பகீர்...

சுருக்கம்

edappadi is the reason for ADMK isolated Today - Thirumavalavan

கிருஷ்ணகிரி

காவிரி விவகாரத்தில் ஒட்டு மொத்த தமிழக அரசியல் கட்சிகளும் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் பிரதமரை சந்திக்க தயாராக இருந்தபோதும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க எடப்பாடி எடுத்த நடவடிக்கையால் இன்று தமிழகத்தில் அ.தி.மு.க. தனிமைப்பட்டு கிடக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தி.மு.க. தோழமை கட்சிகள் சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டத்தில் நேற்று ஈடுபட்டன. 

அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமையில் கிருஷ்ணகிரி ஐந்து சாலை ரௌண்டானா அருகில் சென்னை சாலை, காந்தி சாலை, பழைய உதவி சிறைச் சாலை, சேலம் சாலை, பெங்களூரு சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

இதில் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கனியமுதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. சார்பில் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொன் குணசேகரன், நகர செயலாளர் நவாப், 

மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் காட்டுப்பட்டி கதிரவன், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜேசு துரைராஜ், நாராயணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமநாதன், நகர தலைவர்கள் ரகமத்துல்லா, வின்சென்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தி.மு.க. கூட்டணி கட்சி தொண்டர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் இதுவரை 4 கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் இலட்சக்கணக்கான தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் கட்சிகளை சாராத பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மகத்தான வெற்றி பெறும் வகையில் நடத்தி உள்ளார்கள். 

மோடி அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைக்கும் வரை போராட்டம் தொடரும்.

காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசு தமிழினத்தை வஞ்சிக்க முயற்சி செய்கிறது. தமிழக அரசு ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக இதற்கு துணை போகிறது. 

ஒட்டு மொத்த தமிழக அரசியல் கட்சிகளும் முதலமைச்சர் தலைமையில் காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க தயாராக இருந்தது. ஆனால், ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையால் இன்று தமிழகத்தில் அ.தி.மு.க. தனிமைப்பட்டு கிடக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தல் முடியும் வரையில் பிரதமர் மோடி தமிழக எதிர்க்கட்சிகளை சந்திக்க விரும்ப மாட்டார் என நினைக்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் எங்களது போராட்டம் தொடரும்" என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்