ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தால், எடப்பாடி தரப்பு 5,000 முதல் 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும் என கூறிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கினாலும் தற்போது அந்த சின்னம் செல்வாக்கு இழந்ததாகவே கருதப்படுவதாக விமர்சித்தார்.
குக்கர் சின்னம் கொடுக்காதது ஏன்.?
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியில் இருந்து விலகியது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த சூழ்நிலையில் கடலில் பேனா சிலை தேவைதானா என பலரும் குரல் எழுப்புவதாக கூறினார்.அறிவாலயத்திலேயோ தி.மு.க. தனது சொந்த நிதியில் பேனா சிலை வைத்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என கூறினார். ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் 7-ந் தேதி தான் குக்கர் சின்னம் கிடையாது என அறிவித்தது.
அவைத்தலைவருக்கு அதிகாரம்
முன்கூட்டியே அறிவித்திருந்தால் நாங்கள் சுப்ரீம் கோர்ட் சென்று குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்க அனுமதி வாங்கி இருப்போம் என தெரிவித்தார். நீதிமன்றம் செல்ல உரிய கால அவகாசம் இல்லாததால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லையென தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தான் தங்களது எதிர்கள் என தெரிவித்தவர், அவர்களுக்கு மாற்றாக தங்களது வாக்கை பதிவு செய்வார்கள் என தெரிவித்தவர் இது தொடர்பாக 12ஆம் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே இருந்த பதவி சண்டை காரணமாக தமிழ்மகன் உசேன் கையெழுத்து போடும் வினோதமான, விசித்திரமான நிலை ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக தமிழ்மகன் உசேன் தான் கையெழுத்து போடமுடியும் என உச்சநீதிமன்றம் கூறினால் நிலைமை என்ன ஆகும் என கேள்வி எழுப்பினார்.
இரட்டை இலை சின்னம் மதிப்பு இழந்து விட்டது
ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தால், இபிஎஸ் தரப்பு 5,000 முதல் 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும் என கூறினார். எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கினாலும் தற்போது அந்த சின்னம் செல்வாக்கு இழந்ததாகவே கருதப்படுகிறது. தற்போது அதிகாரம், ஆணவப்போக்குடன் செயல்படும் எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் மதிப்பு இழந்து விட்டதாக குற்றம்சாட்டினார். தற்போது ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். விரைவில் அவர்கள் அணியில் இருப்பவர்கள் உண்மையை உணர்ந்து எங்களுடன் கைகோர்க்கும் நிலை வரும். அடுத்த தேர்தலிலே அது கைகூடும் என எதிர்பார்ப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்