ஐபேக்கை நம்புவீங்க... கட்சிக்காரர்களை நம்பமாட்டீங்களா..? கடும்கோபத்தில் திமுக நிர்வாகிகள்..!

By Thiraviaraj RMFirst Published Dec 5, 2020, 1:23 PM IST
Highlights

திமுகவின் தேர்தல் ஆலோசனை நிறுவனமான ஐபேக்கின் பெயரைக் கேட்ட உடனே அக்கட்சி நிர்வாகிகள் அலறத் தொடங்குகின்றனர். ஐபேக் டீமின் அத்துமீறல்களால் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் வெறுப்படைந்துள்ளனர்.

திமுகவின் தேர்தல் ஆலோசனை நிறுவனமான ஐபேக்கின் பெயரைக் கேட்ட உடனே அக்கட்சி நிர்வாகிகள் அலறத் தொடங்குகின்றனர். ஐபேக் டீமின் அத்துமீறல்களால் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் வெறுப்படைந்துள்ளனர். இதனால், எதிர்வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திற்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் இடையில் ஆரம்பம் முதலே ஒத்துப்போகவில்லை. எனினும் தலைமைக்குக் கட்டுப்பட்டு அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்தநிலையில் ‘விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல்’என்கிற பிரச்சார இயக்கம் தற்போது ஐபேக்கின் நேரடி கண்காணிப்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 

இதையொட்டி ஐபேக் ஆட்கள் செய்யும் அத்துமீறல்களால் அநேகமாக எல்லா மாவட்ட நிர்வாகிகளும் வெறுப்படைந்துள்ளனர். இது தொடர்பாக தென் மண்டலத்தைச் சேர்ந்த ஒரு மாவட்ட நிர்வாகி ஒருவர், ‘’பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு ஒன்றாம் கிளாஸ் வாத்தியாரைக் கொண்டு பாடம் எடுத்தால் எப்படியிருக்கும்? அதுபோலத்தான் இருக்கிறது எங்க கட்சியோட நிலைமை. இன்றைய மாவட்டச் செயலாளர்களில் குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்ற எல்லோரும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.

இவர்களுக்கு அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாத சின்னப் பசங்க உத்தரவு போடும் கொடுமையை எங்கே போய் சொல்வது? இத்தனை காலமும் திமுக பெற்ற வெற்றிக்கு ஐபேக் மாதிரியான ஆட்களா உதவினாங்க? கட்சிக்காரங்க உழைப்பினால்தானே வெற்றி சாத்தியமாச்சிது. இப்ப மட்டும் கட்சிக்காரர்களை நம்பவில்லை என்றால் எப்படி?

நாங்க நடத்தாத நிகழ்ச்சிகளா? ஆனால் இப்ப ஐபேக் ஆட்கள் வந்து அங்கே பேனர் வைக்கணும், இங்கே ஸ்டேஜ் போடணும் என ஆர்டர் போடறாங்க. உள்ளுர் நிலவரம் தெரியாத ஐபேக் ஆட்கள் சொல்லும் பல விஷயங்கள் கேலிக்கூத்தா இருக்குது. லோக்கல் கட்சிக்காரர்கள் தங்கள் படங்களைப் போட்டு போஸ்டர், பேனர் வெச்சா அதையெல்லாம் உடனடியா தூக்கச் சொல்றாங்க. ஸ்டாலின் படம், உதயநிதி படம் மட்டும்தான் இருக்கணும்ணு ஸ்டிரிக்டா ஆர்டர் போடறாங்க. 

இப்படி உள்ளூர்காரர்களை ஒதுக்கினால் நாளைக்கு அவர்கள் எப்படி தேர்தல் வேலை செய்வார்கள்? எப்படி ஓட்டு எப்படி போடுவார்கள். நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் தலையீடு செய்யறாங்க. அதுபோக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளை தனித்தனியா அழைத்து ஆளுக்கேற்ற மாதிரி பேசறாங்க. இதனால் நிர்வாகிகள் மத்தியில் வீண் சந்தேகங்களும், பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. ஐபேக்கின் இதுபோன்ற அத்துமீறல்கள் பற்றி எனக்குத் தெரிந்து எல்லா மாவட்டங்களிலிருந்தும் தலைமைக்கு புகார்கள் போய்க் கொண்டிருக்குது.

 

தலைவர் ஸ்டாலினை பொறுத்தவரை இப்போதுவரை ஐபேக் மீது பெரிய அளவில் ஈடுபாடு கிடையாது. மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோரின் வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டே அவர் ஐபேக் அத்துமீறல்களை கண்டிக்காமல் இருக்கிறார். எதற்கும் ஒரு எல்லை உண்டுதானே! அந்த எல்லையை மீறும் அளவிற்கு செயல்படும்  ஐபேக் ஆட்களை இப்போதே கண்டிக்காவிட்டால் தேர்தலில் விரும்புகிற முடிவு கிடைப்பது கஷ்டம்தான்’’என்கிறார் அவர். 

click me!