அடுத்து கலைஞர் உணவகம்..? அப்போ அம்மா உணவகம் கதி..? அமைச்சர் திகுதிகு..!

By vinoth kumarFirst Published Nov 26, 2021, 6:36 AM IST
Highlights

தமிழ்நாட்டில் 650 சமூக உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் ஒரு உணவகத்திற்கு மாதம் மூன்றரை லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது.

தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் பெயரில் 500 உணவகங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் சொல்லியிருந்தார். அதன்படி விரைவில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மாதிரி சமூதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த டெல்லியில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்றார்.

இதனையடுத்து, டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி;- தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஊட்டச்சத்து மிகுந்த உணவினைப் பெறும் வகையில் கலைஞர் ஆட்சியில் 2007ம் ஆண்டு சிறப்பு பொது விநியோகத் திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின்படி ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ உளுந்தம்பருப்பு, பாமாயில் எண்ணெய், ஆட்டமாவு போன்ற பொருட்களை வெளிசந்தையில் வாங்கி குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலமாக அனைத்துதரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புக்காக ரூ.1160 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் 650 சமூக உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் ஒரு உணவகத்திற்கு மாதம் மூன்றரை லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது. தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் பெயரில் 500 உணவகங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் சொல்லியிருந்தார். அதன்படி விரைவில் கலைஞர் பெயரில் 500 உணவகங்கள் திறக்கப்படும் என்பதையும் கூறினேன்.

அதுபோன்று கொரோனா காலங்களில் மாவட்டத் தலைநகரங்களிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் நோயாளிகள், அவர்களுக்கு உதவும் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டம் மற்றும் சமூக உணவு கூடங்கள் நல்லமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் உணவகங்கள் கொண்டுவரப்பட்டாலும், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும். மேலும், உணவு வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்த ஒன்றிய அரசு 100 சதவிகிதம் நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

click me!