திருச்சி: லால்குடி ஒ.செக்கள் சாதி மோதல். கண்டுகொள்ளாமல் காரில் பறந்த அதிமுக மா.செ.குமார்.!

By T BalamurukanFirst Published Aug 1, 2020, 10:55 AM IST
Highlights

லால்குடி ஒன்றிய அதிமுகவில் கள்ளரா, முத்தரையரா என்ற ஜாதி ரீதியான புதுப் பிரச்னை தலைதூக்கியிருக்கிறது. இந்த பிரச்சனையை சமாளிக்க  முடியாமல் திணறிப்போய் காரில் ஏறி பறந்து விட்டார் திருச்சி புறநகர் மா.செ குமார். சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் இந்த நேரத்தில் ஜாதி ரீதியான கலவரம் தலைதூக்க ஆரம்பித்திருப்பது பெரும் பதட்டத்தை அதிமுகவிற்கு ஏற்படுத்தியிருக்கிறது.
 

 லால்குடி ஒன்றிய அதிமுகவில் கள்ளரா, முத்தரையரா என்ற ஜாதி ரீதியான புதுப் பிரச்னை தலைதூக்கியிருக்கிறது. இந்த பிரச்சனையை சமாளிக்க  முடியாமல் திணறிப்போய் காரில் ஏறி பறந்து விட்டார் திருச்சி புறநகர் மா.செ குமார். சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் இந்த நேரத்தில் ஜாதி ரீதியான கலவரம் தலைதூக்க ஆரம்பித்திருப்பது பெரும் பதட்டத்தை அதிமுகவிற்கு ஏற்படுத்தியிருக்கிறது.


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்கள். அண்மையில் மாவட்டங்கள் அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் அறிவித்தனர். அந்தவகையில் திருச்சி கிழக்கு,மேற்கு மற்றும் துறையூர் தொகுதிகளைக் கொண்ட திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து மணப்பாறை, திருவெரம்பூர், லால்குடி தொகுதிகளைக் கொண்ட புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி குமார் நியமிக்கப்பட்டார்.திருச்சி ஸ்ரீரங்கம், முசிறி மணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளைக் கொண்ட திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பால் அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. புறநகர் மாவட்டச்செயலாளராக குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முதல்வரையும், துணைமுதல்வரையும் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில், புறநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி குமார் பதவி ஏற்ற பின்பு கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க லால்குடிக்கு வந்தார். அந்தப் பகுதி அதிமுக ஒன்றிய செயலாளராக சூப்பர் நடேசன். இவர் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். முன்னாள் ஒன்றிய செயலாளரான குணசீலன் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவருக்குள் நீண்ட நாட்களாகப் பிரச்னை நீடித்துவருகிறது. இந்த நிலையில் மாவட்ட செயலாளர் குமார் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் குணசீலனின் ஆதரவாளர்கள்.. 'சூப்பர் நடேசன் இன்று வரையிலும் கட்சியில் பெரிதாக செயல்படாதவர். அவரை ஒன்றியச்செயலாளர் பதவியிலிருந்து தூக்கினால் தான் இப்பகுதியில் கட்சியை வளர்க்க முடியும் என்று பேச..


பதிலுக்கு நடேசனின் ஆதரவாளர்கள், 'உங்களைப் போன்றோர்களால் தான் கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுகிறது என்றும், உங்களை அடிப்படை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் கொந்தளித்திருக்கிறார்கள். பதிலுக்குக் குணசீலனின் ஆதரவாளர்கள், நீங்கள் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் கைக்கூலி' என்று பேச இரு தரப்பினருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுக நிர்வாகிகளைச் சமாதானப்படுத்த முடியாமல் மாவட்டச்செயலாளர் குமார் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இடத்தை விட்டு அவசர அவசரமாக காரில் ஏறிச் சென்றுவிட்டார். .

click me!