
டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
வறட்சி நிவாரணம் வழங்குதல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 15 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக விவசாயிகளை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அதன்பின்னர் டி.கே.எஸ்.இளங்கோவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது.
'வறட்சி நிவாரணங்களுக்கு மற்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு குறைவாக நிதி ஒதுக்குகிறது. விவசாயிகளின் பிரச்சனையை கவனிக்க வேண்டிய மத்திய அரசு, கஜானாவை நிரப்புவதில் மட்டும் குறியாக உள்ளது' என்றார்.
அவரை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கூறுகையில், 'தமிழக விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவேன்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி நாகப்பட்டினத்தில் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. காரைக்காலில் இருக்கிறது என்று குறிப்பிடப்படுவதில் குளறுபடி உள்ளது. இதுதொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினேன்' என்றார்.