
ஆட்சியைக் கவிழ்க்க, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சதித் திட்டம் தீட்டி செயல்படுவதாக அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இதுகுறித்து, முரசொலி நாளேட்டில் திமுக சார்பில் நக்கலும், நையாண்டியும் கலந்து பதில் கூறப்பட்டுள்ளது.
அரண்டவர்கள் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பார்கள். அது போல ஆட்சி கவிழ்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் தினகரன் மிரண்டு போயுள்ளார்.
ஆட்சி எப்போது கவிழுமோ? என்ன ஆகுமோ? என மிரண்டு கிடக்கின்றனர். ஸ்டாலின் நினைத்திருந்தால் இதற்காக பெரிய சதித்திட்டம் தீட்ட வேண்டியதில்லை.
இத்தனை நாள், இந்த ஆட்சி இருந்த இடத்தில், புல் முளைத்திருக்கும். ஸ்டாலின் தெளிவாக, இரண்டு அணிகளும் எங்களைப் பொருத்தவரை எதிரிகள்தான் என அறிவித்துவிட்டார்.
ஆட்சியைக் கவிழ்த்தால் ‘குடியரசுத் தலைவர்’ என்ற பெயரில் அடுத்த ஆறு மாதங்களுக்கு பிஜேபி-யின் மறைமுக ஆட்சி நடைபெறும். வேறு ஒன்றும் நடைபெறப் போவதில்லை.
அப்படி இருக்க, இந்த ஆட்சியைக் கவிழ்க்க எதற்காக சதி செய்ய வேண்டும்? அமலாக்கத் துறையின் பிடி இறுகிவிடுமோ என்ற பயத்தில் பிஜேபி என்ற பெயரைக்கூட உச்சரிக்கப் பயந்து நடுங்குகிறார்கள்.
அதனால், ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் சதி செய்கிறார் என்று, அடிப்பவனை விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் மீது பாய்வதைப்போல பாய்கிறார் தினகரன் என்று கூறப்பட்டுள்ளது.