அரசு பஸ்களில் போலீஸார் ஓசி பயணம்... போலீஸாருக்கு அறிவுறுத்த டிஜிபிக்கு போக்குவரத்து சங்கம் கடிதம்!

By Asianet TamilFirst Published Oct 7, 2019, 10:29 PM IST
Highlights

அண்மையில் நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்ற அரசுப் பேருந்தில் இரு காவலர்கள்  பயணம் செய்தனர். அப்போது அவர்களிடம் நடத்துநர் ரமேஷ் என்பவர், பயணச் சீட்டை காட்டுமாறு கேட்டார். ஆனால் அவர்கள் பணிநிமித்தமாக செல்வதாக கூறியுள்ளனர். மேலும் உரிய ஆவணத்தை போலீசார் காண்பிக்கவில்லை எனத் தெரிகிறது. இதுதொடர்பாக நடத்துனருக்கும் ஆயுதப்படைக் காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கக் கூடாது என காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்துக்கழகப் பணியாளர் சம்மேளனம் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் காவல் துறையினர் இலவசமாக பயணம் செய்வதை வாடிக்கை வைத்துள்ளனர். பேருந்தில் பயணம் செய்யும் காவலர்கள் பெரும்பாலும் பயண டிக்கெட்டு எடுப்பதில்லை. அதேபோல பெரும்பாலான நடத்துனர்கள் காவலர்களிடம் டிக்கெட் எடுக்கும்படி கேட்பது இல்லை. சில காவலர்கள் மட்டுமே பேருந்தில் டிக்கெட் எடுக்கவும் செய்கிறார்கள். 
அண்மையில் நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்ற அரசுப் பேருந்தில் இரு காவலர்கள்  பயணம் செய்தனர். அப்போது அவர்களிடம் நடத்துநர் ரமேஷ் என்பவர், பயணச் சீட்டை காட்டுமாறு கேட்டார். ஆனால் அவர்கள் பணிநிமித்தமாக செல்வதாக கூறியுள்ளனர். மேலும் உரிய ஆவணத்தை போலீசார் காண்பிக்கவில்லை எனத் தெரிகிறது. இதுதொடர்பாக நடத்துனருக்கும் ஆயுதப்படைக் காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இரு காவலர்களும் நடத்துநர் ரமேஷை சரமாரியாகத் தாக்கினர். அதில் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
அது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து இரு காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும்  மாநில மனித உரிமை ஆணையம் இரு காவலர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு தமிழக போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் கடிதம் எழுதியுள்ளது.

இந்தக் கடிதத்தில், “அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய காவல்துறையினருக்கு தமிழக அரசும், காவல்துறையும் அனுமதி வழங்கவில்லை என்பதை காவலர்களுக்கு தெரியபடுத்தி, இனி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்து வேண்டும்”  தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

click me!