
சமூக கொடுமைகளுக்கு ஏதிராக கலைஞர் ஆற்றிய பணியை, மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செய்வார் என சென்னையில் நடைபெற்ற வைரவிழா பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா வாழ்த்தினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா மற்றும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசியதாவது;
கருணாநிதி பன்முக திறமை கொண்டவர், அவரது எழுத்துக்களை படித்தவன், நேசித்தவன் நான். இந்தியாவில் ஆளுமை நிறைந்த தலைவர் கருணாநிதி. சமூக கொடுமைகளைத் தொடர்ந்து எதிர்த்து வரும் மாபெரும் தலைவர் கலைஞர். சமூக கொடுமைகளுக்கு ஏதிராக கலைஞர் ஆற்றிய பணியை, மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செய்வார்.
சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்படவேண்டும். மதவெறி அரசியலுக்கு எதிராக முதல் குரல் கொடுப்பவராக கலைஞர் திகழ்ந்து வருகிறார். ஜாதி, மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகள் அகற்றப்பட வேண்டும் என நினைக்கும் கருணாநிதி அற்புதமான பண்புகளைக் கொண்டவர். இந்திய அளவில் பன்முகத் தன்மை கொண்ட தலைவர் அவர், இந்தியாவை மதவெறி அரசியலில் இருந்து மீட்க, ஸ்டாலின் எங்களோடு கைகோர்ப்பார் என இவ்வாறு டி.ராஜா பேசினார்.