படித்த இடத்திலேயே உயிரிழந்த சோகம்... குன்னூரிலும் சென்னையிலும் தலைமை தளபதி பிபின் ராவத் படித்தது என்ன?

By Asianet TamilFirst Published Dec 8, 2021, 10:14 PM IST
Highlights

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் ராவத்தின் குடும்பமே ராணுவக் குடும்பம். இவரது குடும்பமே பல தலைமுறையாக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி இருக்கிறது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் ராணுவத் தளபதி பிபின் ராவத், படித்த இடமான குன்னூரிலேயே உயிரிழந்திருக்கிறார்.  

குன்னூரில் ராணுவக் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் காட்டேரி மலைப் பகுதியில் ஹெலிகாப்டரில் பறந்துமோது ஹெலிகாப்டர்  கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிபின் ராவத் உயிரிழந்தது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத் தளபதியாக கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019 டிசம்பரில் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்றார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் ராவத்தின் குடும்பமே ராணுவக் குடும்பம். இவரது குடும்பமே பல தலைமுறையாக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி இருக்கிறது. டேராடூன், சிம்லா ஆகிய இடங்களில் பள்ளிப் படிப்பை படிப்பை ராவத், கடக்வாஸ்லாவில் தேசிய ராணுவ அகாடமியில் சேர்ந்தார். பின்னர் இந்திய ராணுவ அகாடமியிலும் சேர்ந்த கல்வி பயின்று ராணுவ வீரரானார். பின்னர் குன்னூர் வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். மேலும் அமெரிக்காவில் ராணுவம் குறித்து பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

இதேபோல சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ராணுவப் படிப்பில் எம்.பில் பட்டத்தை முடித்தார். கணினி மற்றும் மேலாண்மை பட்டயப் படிப்பையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முடித்தார். 2008-ஆம் ஆண்டு காங்கோ நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அனுப்பப்பட்ட அமைதிக்குழுவில் இந்தியாவின் சார்பாக சென்ற பிரதிநிதிகளில் பிபின் ராவத்தும் ஒருவர். ராணுவப் படிப்பை பல இடங்களில் முடித்த ராவத், தமிழகத்தில் குன்னூரிலும் சென்னையிலும் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படித்த இடமான குன்னூரிலேயே பிபின் ராவத் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!