வெங்கடாசலத்திற்கு விஜிலென்ஸ் எந்த டார்ச்சரும் கொடுக்கவில்லை..! சென்னை கமிஷனர் தடாலடி

By Thanalakshmi VFirst Published Dec 4, 2021, 8:23 PM IST
Highlights

முன்னாள் மாசுக்கட்டுபாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் ,லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக அழைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையார் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
 

முன்னாள் மாசுக்கட்டுபாடு வாரிய தலைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், விஜிலென்ஸ் மூலம் திமுக அரசு கொடுத்த தொடர் நெருக்கடி தான் காரணம் சென்று குற்றச்சாட்டப்பட்ட நிலையில், வெங்கடாசலத்திற்கு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மூலம் மிரட்டல் வந்ததாக எந்த தகவலும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

கடந்த 2 ஆம் தேதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த, முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரான வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . சென்னை வேளச்சேரியில் தலைமை செயலக காலனியில் உள்ள அவரது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  மேலும் இதனை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம், இவர் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டிலிருந்து 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தனப் பொருட்கள், ரூ.13.5 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டிருந்தன. தொடர்ந்து, இவரது சொகுசு பங்களா, அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து, வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 2019ல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட இவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தலுக்கு முன்பு 60 தொழில் நிறுவனங்களுக்கு அவசர, அவசரமாக தடை இல்லா சான்று வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர். இதனிடையே பல்வேறு நிறுவனங்களின், திட்டங்களுக்கு முறைகேடாக, தனது தொண்டு நிறுவன பெயரில் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அனுமதி வழங்கியதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவரது மரணத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நெருக்கடி தான் காரணம் எனவும் அவரைபோன்ற அதிகாரிகளுக்கு திமுக நெருக்கடி கொடுக்கிறது எனவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும் முன்னாள் மாசுக்கட்டுபாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மரணத்தை சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் எனும் கோரிக்கை விடுத்து விவாத பொருளானது. 

இதனையடுத்து இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதுகுறித்து வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இதுவரை வெங்கடாசலம் தற்கொலையில் கிடைத்த வாக்குமூலம் படி அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. கைப்பற்றப்பட்ட அவரது செல்போன் , டேப் தொடர்பாக தடயவியல் துறையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். உடற் கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகு தேவைப்பட்டால் கூடுதலாக சட்டப் பிரிவுகளை சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும். விஜிலென்ஸ் சார்பாக வெங்கடாசலத்திற்கு சம்மன் அனுப்பியதாக எங்களது தரப்பில் எந்த தகவலும் இல்லை. எப்போது விசாரணைக்கு வர முடியும் என்று அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜிலென்ஸ் அதிகாரிகள் பேசியுள்ளனர் என்றே தெரியவந்துள்ளது. மிரட்டல் என்று எந்த தகவலும் இல்லை. அவர் மனைவி அளித்த புகாரில் கணவர் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று எதுவும் குறிப்பிடவில்லை என்று கூறினார்.

click me!