தள்ளாடும் தமிழகம் - ஆழ்ந்த உறக்கத்தில் ஆட்சியாளர்கள்: அண்ணாமலையின் பட்ஜெட் அலசல்

By SG BalanFirst Published Mar 22, 2023, 6:50 PM IST
Highlights

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பட்ஜெட்டை விமர்சித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசின் கடன் மற்றும் வருவாய் நிலவரம் குறித்து விரிவாக அலசியுள்ளார். திமுக அரசு வந்தவுடன் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அதில் சுட்டிக்காட்டுகிறார்.

தமிழ்நாடு அரசின் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பட்ஜெட் பற்றி ட்விட்டரில் எழுதிய பதிவில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் 28 மாத நிலுவைத்தொகையைச் சேர்த்து 29 ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்றார்.

இந்நிலையில், தற்போது தமிழக பட்ஜெட் பற்றிய விமர்சித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் அவர்கள், திக்கி திணறி பட்ஜெட்டை வாசித்துக் கொண்டிருக்கும் போது, ஆளும் கட்சியின் மாண்புமிகு அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், அவர்களின் ஆட்சியை போலவே செயலற்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். இது போன்ற பட்ஜெட் மாடல் இதுவரை எங்கும் நடந்ததில்லை.

திக்கி திணறி தடுமாறியது மாண்புமிகு நிதியமைச்சர் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் நிதி நிலைமையும் தான். தமிழகத்தின் நிதி நிலைமை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறையால் மட்டுமல்ல... தமிழக அரசின் திறமையின்மையால், வருமானத்தை பெருக்குவதற்கான வழிவகைகளை ஆராயாமல், ஆக்கபூர்வமான வருமானத்தை பெருக்கும் ஆற்றல் இல்லாமல், ஆண்டுக்கு ஆண்டு டாஸ்மாக் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

மதிப்பிற்குரிய தமிழக மக்களை எல்லாம் மதுவிற்கு அடிமை ஆக்கி, இந்த மாநிலம் சாதிக்க நினைக்கும் மகத்துவம் என்ன? ஆட்சிக்கு வந்த இரண்டு  ஆண்டுகளுக்கு உள்ளாக மது விற்பனையை 45,000 கோடி ரூபாய்க்கும் மேல் உயர்த்தி இருப்பது தான் திமுக அரசின் சாதனை. மது விற்பனையை மேலும் 50,000 கோடி ரூபாய்க்கு உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்பதை நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டும்.

தமிழக மக்களை எல்லாம் குடிகாரர்களாக மாற்றும், உடல் நலத்தை கெடுக்கும், மது விற்பனை அதிகரிப்பது என்பது ஒரு மாநில அரசு செய்யும் வேலையா? தமிழ்நாட்டில் மட்டும் தான் மிக விசித்திரமாக குடும்பத்தை கெடுக்கும் மது விற்பனையை அரசாங்கமும், அறிவுசார் கல்விக்கூடங்களை தனியார்களும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

குருவிமலை பட்டாசு ஆலை விபத்து: இனி இதுபோல் நடக்காமல் இருக்க அண்ணாமலை ஆலோசனை

என்ன தகுதி தேவைப்படுகிறது?

நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நிலுவையில் வைத்திருக்கும் திறனற்ற திமுக அரசு, தமிழக மக்களையெல்லாம் தவிப்புடன் காத்திருக்க வைத்துள்ளது. தமிழகத்தின் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் கடத்தி வந்தது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேரத்தில் உளவுத்துறை மக்களின் கோபத்தை எடுத்துச் சொன்ன பிறகு இந்த பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்க போவதாக அறிவித்துள்ளது. ஆனால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மறந்து தற்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு என்ன தகுதி தேவைப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை. இப்படி செய்வதால், தங்களுக்கு தேவையானவர்களுக்கு மட்டும் இந்த பணத்தை வழங்குவதற்கான ஊழல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

ஆகவே தமிழகத்தில் உள்ள இரண்டு கோடியே இருபது லட்சம் குடும்ப ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அதையும் கடந்த 28 மாத நிலுவை தொகையுடன் சேர்த்து, இம்மாதம் குடும்பத் தலைவிகளுக்கு 29 ஆயிரம் ரூபாயாக ஒரே தவணையில் வழங்க வேண்டும்.

கடன் சுமை

தமிழகத்தின் நிதி நிலையை சீர் செய்வதற்காக, முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் சீன் டிரிஸ், பொருளாதார துறை முன்னாள் செயலர் நாராயணன், மற்றும் நோபல் பரிசு பெற்ற பெண்மணி எஸ்தர் டெஃப்லோ ஆகியோர் தமிழக அரசு நிதி ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஆலோசனை தந்தார்களா? அந்த ஆலோசனைககள் அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? தற்போது அவர்கள் ஆலோசகர்களாக தொடர்கின்றார்களா?  அல்லது அவர்களின் ஆலோசனைப்படித்தான் டாஸ்மாக் சாராய வியாபாரம் உயர்த்தப்படுகிறதா?

அதாவது திமுக ஆட்சியில் திட்டங்களாகட்டும், வாக்குறுதிகளாகட்டும், எல்லாமே வெறும் அறிவிப்புக்களோடு நின்றுவிடும். அவை ஆவணங்களாக கூட மாறாது. திமுகவின் கவர்ச்சிகரமான மேடை அறிவிப்புகள், பத்திரிக்கை செய்திகளில் மட்டும் மின்னி விட்டு மறைந்து விடும்.

கடந்த 09.08.2021 அன்று நிதி அமைச்சர் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழக அரசின் நிதி நிலைமையை விளக்கியிருந்தார். “தமிழகத்தின் 2020-21 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. 2021 - 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ 5,70,189 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் உள்ளது” என்று திமுகவின் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் ‘கடன் சுமையை குறைப்போம்’ என்று வாக்குறுதி தந்து விட்டு, 2023-24 நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த கடன் சுமை 7,26,028 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும் என திமுக அரசு தெரிவித்துள்ளது.

நேர்மைக்கு கிடைத்த பரிசு! ரயில்வே கூலித் தொழிலாளரின் செயலுக்கு குவியும் பாராட்டு!

தமிழக அரசின் கடந்த கால கடன் வளர்ச்சி

1999-2000 - ரூ.18,989 கோடி

2000-2001 - ரூ.28,685 கோடி

2001-2002 - ரூ.34,540 கோடி

2005-2006 - ரூ.50,625 கோடி

2011-2012 - ரூ.1,03,999 கோடி

2015-2016 - ரூ.2,11,483 கோடி

2017-2018 - ரூ.3,14,366 கோடி

2020-2021 - ரூ.4,56,660 கோடி

2023-2024 – ரூ.7,26,028 கோடி

இன்றைக்கு உள்ள சூழலில் தமிழகத்தில் 2.20 கோடி குடும்பங்கள் இருப்பதாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு குடும்பங்களின் தலையிலும் ரூ,3,30,000 ரூபாய்க்கும் மேல் கடன் உள்ளது.

பள்ளிகள்

பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிகளும், பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும், என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து   சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிகள் எல்லாம் பக்தர்களின் நன்கொடைகளை ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்ட பள்ளிகள் ஆகும். பல்வேறு பள்ளிகளில் கோவில்களும், சில கோவில்களுக்குள் பள்ளிகளும் இயங்குகின்றன.

இந்து சமய அறநிலையத்துறையின் பள்ளிகளை எல்லாம் அரசு பள்ளிகளாக மாற்றம் செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. ஆகவே இது போன்ற அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட, ஆலயங்களை முடக்கும் முயற்சிகளை தமிழக முதல்வர் கைவிட வேண்டும். தமிழக அரசு ஆலயங்கள் நடத்தும் கல்விக்கூடங்களை அரசுடமையாக்க கூடாது.

மீனவர்கள்

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை கடந்த பட்ஜெட்டில் ரூ.5,000 த்திலிருந்து ரூ.6,000-மாக  உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிப்பு வழங்கப்பட்டது. இது அறிவிப்பாக மட்டுமே இருக்கிறதே தவிர, இப்போது வரை உயர்த்தப்பட்ட அத்தொகை தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.

கூடுதலாக உயர்த்தப்பட்ட தொகை மீனவர்களுக்கு வழங்கப்பட்டதா அல்லது மீன்வளத் துறையால்  சுருட்டப் பட்டுவிட்டதா?  இதை ரூ. 8,000 மாக உயர்த்தி தருவோம் என்று வழங்கிய தேர்தல் வாக்குறுதி திமுகவினருக்கு நினைவில்லாமல் போனது வருத்தமே.

வேலைவாய்ப்பு

ஆண்டுக்கு 10 லட்சம் தனியார் வேலைவாய்ப்பு வழங்கப்படும் மற்றும் 3 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என இனிப்பான தேர்தல் வாக்குறுதியை திமுக அறிவித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுவிட்டனவா, 7 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டனவா என்பதை தமிழக அரசு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. இனிமேலாவது செய்யப் போகிறோம் என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மக்களை நம்பவைத்து தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளைக்கூட வெளியிட முடியாமல், தேங்கி நிற்கிறது திமுக நிர்வாகம். ஏமாந்து ஏங்கி நிற்பது தமிழக இளைஞர்களே.

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில், திமுக வாக்குறுதிகளில் ஒன்றான தமிழகத்தில் 21 கலை அறிவியல் கல்லூரிகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது?

விளையாட்டு

உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை அமைப்பதற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத காரணம் என்ன? கல்விக்கடன் ரத்து என்ன ஆனது? நகைக்கடன் ரத்து என்ன ஆனது? ஏறத்தாழ 70%-க்கும் மேற்பட்டோருக்கு நகைக்கடன் ரத்து மறுக்கப்பட்ட ரகசியம் என்ன?பெட்ரோல் டீசல் விலை குறைப்பு சொன்னபடி ஏன் நடைபெறவில்லை?100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டதா? சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் என்ன ஆனது?பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நினைவிருக்கிறதா?

இப்படி தேன் தடவிய தேர்தல் வாக்குறுதிகளை தெருக்கள் தோறும் முழங்கி விட்டு, தற்போது அவற்றில் எதையும் நிறைவேற்றாமல் சதவீதக் கணக்கில், 80%  நிறைவேற்றி விட்டதாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

Evergreen bonus: 5 ஆண்டு ஊதியம் போன்ஸ்! கொரோனா காலத்தில் கொடிகட்டிப் பறந்த நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

விலை உயர்வு

பால் விலை உயர்வு? மின் கட்டண உயர்வு? சொத்து வரி உயர்வு? மத்திய அரசு விலை குறைத்தும் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு? என்று வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்திவிட்டு, மக்களை கசக்கிப் பிழிந்து வரிகளை எல்லாம் வசூலித்துவிட்டு, போதா குறைக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதுபான போதையிலேயே தமிழகத்தை மூழ்க விட்டு, வருவாய் பற்றாக்குறையை குறைத்து விட்டோம் என்று தமிழக அரசு எப்படிச் சொல்கிறது?

தமிழகத்தின் வருவாயை அதிகரிக்க ஆக்கபூர்வமான எந்த புதிய திட்டங்களும் தொடங்கப்படவில்லை.     அரசின் செலவினங்களை குறைக்க தமிழக அரசு  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2022-23-ல் ரூ.2,84,188 கோடியாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் செலவினங்கள், திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் ரூ. 2,76,135 கோடி மட்டுமே. சதவீதக் கணக்கின் அடிப்படையில் வெறும் 3% கூட  குறையவில்லை.

விடியல் வரப்போவதில்லை

இப்படி, கண்களுக்கு மட்டும் விருந்தாகும் கானல் நீர் போல, அறிவிப்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த கண்காட்சி பட்ஜெட்டால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை, விடியலும் வரப்போவதில்லை. இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில், கடன்சுமையை மேலும் அதிகரித்து சாதனை படைத்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு.

இளைஞர் நலன், வேலைவாய்ப்பு, வேளாண்மை, நீர் பாசனம், தொழில் முன்னேற்றம், தனிநபர் வருமானம், வளர்ச்சி மற்றும் கட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு எந்தவிதமான உறுதியான திட்டங்களும் தமிழக அரசால் அறிவிக்கப்படவில்லை

வாய்ச்சொல் வீரம்

பட்ஜெட்டில் நமது கடன் நிலை என்ன? வருமானம் எப்படி எல்லாம் மாறியுள்ளது? செலவினம் எப்படி எல்லாம் மாறியுள்ளது ஆகிய மூன்றும்  மிக முக்கியமானவை. இது குறித்த விரிவான தகவல் பட்ஜெட்டில் இல்லை. பொதுத்துறை நிறுவனங்களான மின்வாரியம், போக்குவரத்து கழகம், குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ குடிநீர் வாரியம் போன்றவை எந்த நிலையில் உள்ளன என்பதையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இப்படி எதுவுமே செய்யாமல் நாடகம் போட்டு வாய்ச்சொல் வீரம் காட்டுவதன் மூலம், தமிழகத்தின் தள்ளாட்டத்தை நிறுத்த முடியாது. இதற்கு மேல் திறனற்ற திமுகவிடம் எதிர்பார்க்கவும் முடியாது

இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பாதுகாப்பான முதலீட்டுக்கு தபால்துறை வழங்கும் பக்காவான சேமிப்புத் திட்டம்!

click me!