
ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல், போராடுவதே பிழைப்பாய் போன மக்கள், எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் எதிர்கட்சிகள், மாநில உரிமையை மடக்க முயலும் மைய அரசு!...என்று தமிழ்நாட்டின் கதையே மிகப்பெரிய கதையாய் இருக்கும் போது நம் தலைவர்களும் மேடைக்கு மேடை குட்டிக் கதை சொல்வது ஜனநாயகத்தை மிரள வைக்கிறது!
தமிழக அரசாங்கம் தினமும் மக்களுக்கு தண்ணீர் திறந்து விடுகிறதோ இல்லையோ, சத்துணவு போடுகிறதோ இல்லையோ, ரேஷனில் கிருஷ்ணாயில் ஊற்றுகிறதோ இல்லையோ ஆனால் ஒரேயொரு காரியத்தை மட்டும் மாவட்டம் மாவட்டமாய் செய்து கொண்டிருக்கிறது. அது ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா’தான்.
அந்த வகையில் இன்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றிருக்கிறது இந்த விழா. இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் உரையினூடே ஒரு குட்டிக் கதை சொன்னார். அது ஆமை கதை! தன் தகுதிக்கு ஏற்ப இயற்கை தந்திருக்கும் ஊர்ந்து செல்லும் குணத்தை விட்டு, பறவைகளை பார்த்து பறக்கும் ஆசை கொண்டு பறாந்த ஆமை வானத்தில் இருந்து தரையில் விழுந்த கதைதான் அது. ‘இருபத்தை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் ஆமை கதிதான்.’ என்று யாரையோ இடித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முதல்வர் இடித்தது ஸ்டாலினையா அல்லது தினகரனையா? என்று கேட்டால், அது பத்தாம் பசலித்தனமானதாகத்தான் இருக்கும். காரணம் ஒருவர் முதலில் தன் வீட்டுக்குள் இருக்கும் எதிரியை விமர்சித்துவிட்டுதான், வெளியிலிருக்கும் எதிரியை திட்டுவார். ஆக தகுதிக்கு மேல் ஆசைப்பட கூடாது! என்று முதல்வர் சொல்லியது டி.டி.வி.யைத்தான் இருக்க முடியும் என்பதே நிதர்சனம்.
முதல்வரின் இந்த இடிப்பு பேச்சுக்கு ‘அம்மா பன்னீர் செல்வத்தை முதல்வராக்கியதும், சின்னம்மா பழனிசாமியை முதல்வராக்கியதும் தகுதி பார்த்தல்ல, நம்பிக்கையின் அடிப்படையில்தான். எடப்பாடி பழனிசாமி என்ன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டா முதல்வரானார்? எங்கள் தினகரனை பார்த்து ‘தகுதிக்கு மேல் ஆசைப்பட்டால் அதோ கதிதான்!’ என்று சொல்ல இவர் யார்?
முதல்வராகும் தகுதி யாருக்கு இருக்கிறது? என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். அந்த தகுதி தினகரனுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை அறிய வேண்டுமானால் தன் முதல்வர் பதவியை பழனிசாமியும், தன் துணை முதல்வர் பதவியை பன்னீர்செல்வமும் ராஜினாமா செய்துவிட்டு தொண்டர்களை முடிவெடுக்க விடட்டும். அல்லது ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும். அப்போது தெரியும் தங்களின் தகுதி இவர்களுக்கு!” என்று பதில் விமர்சனத்தை கொட்டத் துவங்கியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் சில ஆளுமைகளுக்கு தங்களின் வல்லமையை காட்ட குட்டிக் கதை சொல்லும் பழக்கம் இருந்தது. முழு நேர அரசியல்வாதியாக ஜெயலலிதாவும், தன்னை பற்றிய பரபரப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் வரும்போது ரஜினிகாந்தும் இந்த குட்டிக் கதை சொல்லும் பழக்கத்தை வைத்திருந்தனர். அதன் பிறகு சில காலம் ஸ்டாலினும் அதை செய்வார். ஆனால் ரெகுலராய் செய்வதில்லை. ஆனால் எடப்பாடி இப்போது எம்.ஜி.ஆர். மேடைகளில் இந்த குட்டிக்கதை பழக்கத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். குட்டிக் கதை சொன்னால் ’அம்மா போல் ஆகிவிடலாம்’ என்று பழனிசாமி நினைக்கிறார் என்றும் இதில் விமர்சனம் உண்டு.
ஆமை, பூனை, குதிரை என்று ஆளாளுக்கு ஒரு கதை பிடிக்கிறார்கள்.
இந்த குட்டிக் கதைகள் இவர்களின் அரசியலுக்கு எந்த வகையில் கைகொடுக்குமோ தெரியவில்லை. ஆனால் தமிழக மக்களின் கோரிக்கை என்ன வென்றால் இந்த குட்டி கதையை யோசிக்கும் நேரத்திலும், இந்த கதையை சொல்லும் நேரத்திலாவது மாநில வளர்ச்சியை பற்றி சிந்திக்கலாமே! என்பதுதான்.