
தமிழக சட்டமன்றத்தில் தலைவர்களின் பர்ஷனல் பக்கங்களும் விவாதப்பொருளாக தவறியதில்லை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவற்றில் பல அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதுமில்லை!....
கலைஞரின் வாழ்க்கையில் ராசாத்தியம்மாளின் இருப்பு பற்றிய ஒரு விவாதம் தமிழக சட்டமன்றத்தில் வந்துவிட்டது. ராசாத்தியம்மாளை குறிப்பிட்டு ‘அவர் யார்?’ என்று கேட்டுவிட்டார் உறுப்பினர் ஒருவர். உடனே எழுந்த கலைஞர் ‘அவர் என் மகளின் தாய்!’ என்று ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்தார்.
தமிழக அரசியல் பெண்களை எப்படி பார்க்கிறது, எப்படி அணுகுகிறது! என்பதை விளக்கும் பதங்களில் இதுவும் ஒன்று.
அதே கலைஞரின் முயற்சியால்தான் இந்தியாவின் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் எனும் பெண் சிம்மாசனம் ஏறமுடிந்தது. (பிரதீபாவும், அவரது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினரும் அந்த பதவிக்கும், ஜனாதிபதி மாளிகைக்கும் பெருமை சேர்த்தனரா? என்று குடியரசு தலைவர் மாளிகை தோட்டத்து துலிப் மலர்களை கேட்டீர்களேயானா அது குமுறிக் குமுறி அழும். அது வேறு கதை).
தமிழக அரசியலில் பெண்கள் காலம் தள்ளுவதென்பது, சுனாமி அலையின் எதிர்திசையில் துடுப்பு போடுவது போலத்தான். ஜெயலலிதா சட்டமன்ற நாயகியாக ஜொலித்தார் என்றால் நெருப்பாற்றில் நீந்தி கரைசேர்ந்த பின் தான் அது சாத்தியமாயிற்று. துரத்தும் பகை, துரோகம், அவமானம், ஆணாதிக்க அட்டூழியங்கள் என எல்லாவற்றையும் திறம்பட எதிர்த்து, அன்புகாட்டி, திருப்பி அடித்து, பதிலுக்கு பதிலாக காலை வாரி, அடக்கி, கருணைக்கரம் நீட்டி, சர்வாதிகாரம் செய்து, பயம் காட்டி என்று நவரசங்களையும் ஆடித்தான் இறுதி வரை இரும்புப்பெண்மணியாய் வலு காட்டினார்.
ஆனால் அவர் இல்லாத நிலையில் வெறும் அரசியல் வெற்றிடம் மட்டுமல்ல, ஆளுமை நிறைந்த பெண்ணியத்திலும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதே யதார்த்தம்.
தமிழக அரசியலில் எல்லா கழகங்களிலும் வி.வி.ஐ.பி. பெண் முகங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஆளுமை மிக்கவர்களாக இருக்கிறார்களா? அவர்களுக்கு அதிகார வாய்ப்புகள் இருக்கின்றனவா? அரசியல் எனும் பொதுசேவைக்குரிய தகுதி, கடமையுணர்வு அவர்களிடம் இருக்கிறதா? தன்னைத் தானே செதுக்கி உயர்த்த முனைகிறார்களா? என்று ஒரு அலசு அலசலாம்.
கனிமொழி (எ) கனிம்மா!
கழக மகளிரணி மாநில செயலாளராக இருக்கும் கனிமொழிக்கு எதிரிகள் எதிர்கட்சியில் இல்லை, அவரது குடும்பத்துக்குள்ளேயேதான்.
கனிமொழிக்கென்று மாநிலமெங்கும் ஒரு ‘அண்ணாச்சி’ ஆதரவு கூட்டம் இருப்பது உண்மைதான். ஆனால் அவற்றை ஒருங்கிணைத்துக் கொடுக்க ராசாத்தியம்மாளின் ஆளுமையும் தேவைப்படுகிறது.
மேடைப்பேச்சில் அண்ணாதுரையையே அசரடித்த கருணாநிதியின் பிள்ளைகள், அப்பாவையே பின்னுக்கு தள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்டாலினின் பேச்சில் புள்ளிவிபரம் இருக்கும் புன்னகைக்க வைக்கும் சூட்சமங்கள் இருக்காது. கனிமொழியின் பேச்சில் கவிதை நடை இருக்கும் ஆனால் கவர்ந்து இழுக்கும் கான்செப்ட் இருக்காது. அழகிரி பேச்சு பற்றி பேசாமலிருப்பது நமக்கு நல்லது.
இனி வரும் காலங்கள் அரசியல் தளத்தில் இவருக்கு மிக முக்கியமான பொழுதுகள். குறுகிய காலத்தில் வர இருக்கும் 2ஜி தீர்ப்பு, கருணாநிதியின் இயலாமை நிலைக்கு பின் வரிசை கட்டும் தேர்தல்கள் என்று கனிம்மாவுக்கு இனிதான் அக்னிபரீட்சை ஆரம்பம்.
பிரேமலதா (எ) அண்ணியார்
குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்சி துவக்கிய விஜயகாந்த் தனது மனைவிக்கு தந்திருக்கும் பொதுசேவை வாய்ப்பு இது. கழக மகளிரளிரணி தலைவியாக இருக்கும் இவரை கட்சியினர் அழைப்பது ‘அண்ணியார்’ என்றுதான்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியிலும், அதற்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியிலும் தே.மு.தி.க. இருந்தபோது விஜயகாந்த் கால் வைக்க வேண்டிய பல மேடைகளில் அவருக்கு பதிலாக களம் கண்டவர் பிரேமலதாதான். கூட்டத்தை ஈர்க்குமா இவரது பேச்சு? என்று சுணங்கிய கூட்டணி தலைவர்கள் ஆச்சர்யத்தில் அசந்து போகுமளவுக்கு பின்னி பெடலெடுத்தார்.
தமிழிசை
பா.ஜ.க.வின் தமிழக தலைவர். காலையில் விருதுநகர், மாலையில் சேலம், இரவில் சென்னை விமான நிலையத்தில் பேட்டி, மறுநாள் காலையில் அதே இடத்தில் மறு பேட்டி கொடுத்துவிட்டு டெல்லி பயணம் என்று சூறாவளி டா!வாக இருக்கிறார். கட்சி வளர்ச்சிக்காக பல திட்டங்களை பரபரவெனதான் ஆரம்பிக்கிறார். தினமும் ஒரு தலித் வீட்டில் உணவு என்பதில் ஆரம்பித்து பல திட்டங்களை சொல்லலாம். இவரது உழைப்புக்காக தினமும் ஒரு ஓட்டு கூடியிருந்தாலும் கூட பா.ஜ.க. இன்றைக்கு ஒரு நகராட்சியை தனிமெஜாரிட்டியில் பிடிக்குமளவுக்கு வளர்ந்திருக்கும்.
தமிழிசைக்கும் எதிரிகள் எதிர்க்கட்சியில் இல்லை சாட்சாத் உள்ளேயேதான் தாமரை மலர்களுக்குள் இருக்கிறார்கள். தொண்டர்களுக்குதான் இவர் மாநில தலைவரே தவிர மற்ற நிர்வாகிகளுக்கு இல்லை. அக்காவின் பேச்சை இனியாச்சும் கேளுங்க பாஸ்.
குஷ்பு
பாரம்பரியமான தேசிய காங்கிரஸ் தனது வளர்ச்சிக்காக கட்டமைத்த கொள்கை பரப்பு துறையில் தேசிய பொறுப்பிலிருக்கிறார் குஷ்பு. பாலிடிக்ஸை பார்ட் டைமாக செய்யும் நடிகை. தனக்கு கோயில் கட்டிய தறுதலை ரசிகன்களை நம்பி அரசியலிலும் கால் வைத்தது இவருக்கு வீண் போகவில்லைதான். அரசியலில் இருக்கும் சில ’தறுதலை’வர்கள்தான் இவரை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் வறுத்தெடுக்கிறார்கள்.
சென்னையில் வெயில் உச்சத்திற்கு போனால் சுவிட்சர்லாந்தில் போய் உட்கார்ந்து கொண்டு ட்விட்டரில் பாலிடிக்ஸ் நடத்துவதும், கஞ்சிக்கே வழியில்லாமல் தமிழன் செத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கோவா திரைப்பட விழாவில் லூஸ் ஹேரை கோதியபடி ‘ஆக்சுவலி, சைக்கலாஜிக்கலி, பிசிக்கலி’ என்று பேட்டி கொடுப்பதும்தான் குஷ்புவின் பிராண்டட் பொதுசேவை குணங்கள்.
குஷ்பு இனியாவது சேவைக்காக அரசியல் செய்தால் அதை முதல் ஆளாக கை தட்டி வரவேற்போமாக.
ஆக இந்த நால்வர் போக காங்கிரஸின் விஜயதாரணி, பா.ஜ.க.வின் வானதி என்று வெகு சில பெண் ஆளுமைகளே தமிழக அரசியலில் வலம் வருகிறார்கள். இவர்களின் அரசியல் குரல்கள் மீடியா வழியாக வெளியே கேட்கின்றனவே தவிர சித்தாந்த மற்றும் கொள்கை ரீதியாக வெளிப்படுகிறார்களா என்றால் அது பெரிய்ய்ய்ய டவுட்டுதானே!
பெண் நினைத்தால் பெரும் மாற்றம் சாத்தியம். எனவே மாறுங்கள், மாற்றுங்கள் சகோதரிகளே!